3 சடலங்கள்.. 3 கடிதங்கள் - ரூ.33 லட்சம் கடன், காருக்கு இன்ஸ்டால்மென்ட் பாக்கி - மகன், மகளுடன் தாய் தற்கொலை

3 தற்கொலை கடிதங்களும் கண்டெடுக்கப்பட்டன.
ஜென்னி சோனி, நீல்காந்த் சோனி, ஆர்த்திபென் சோனி
Published on: 
Summary

குஜராத் மாநிலம் வதோதராவில் 47 வயது பெண்மணி, அவரது மகன், மகள் கூட்டாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்த ஆர்த்திபென் சோனி (47), அவரது 24 வயது மகன் நீல்காந்த் சோனி, 22 வயது மகள் ஜென்னி சோனி ஆகியோர் நேற்று அவர்களது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.

தற்கொலை

வீட்டின் வெவ்வேறு அறைகளில் மூவரின் உடலும் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டன. மேலும் அங்கிருந்து 3 தற்கொலை கடிதங்களும் கண்டெடுக்கப்பட்டன.

அவர்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டு தடையங்கள் சேகரிக்கப்பட்டதாக போலீஸ் துணை கமிஷனர் ஜிபி பாபானியா தெரிவித்துள்ளார்.

பண நெருக்கடி

அவர்களின் தற்கொலை கடிதங்களில் பணப் பரிவர்த்தனை குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. இதன்மூலம் ரூ.33 லட்சம் கடன் சுமையும், இரண்டு கார்களுக்கு இன்ஸ்டால்மென்ட் பாக்கியும் அவர்களுக்கு இருந்தது தெரியவந்துள்ளது.

தங்கள் வீட்டை விற்று கடன்களை அடைக்கவும் அவர்கள் ஆலோசித்தது தெரியவந்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

எனவே இந்த பண நெருக்கடியால் அவர்கள் தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட விசாரணையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மன உளைச்சல்

ஜாப்ஸ் ஹெல்த்கேர் எனும் ஆயுர்வேத மருத்துவமனையை இக்குடும்பம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடத்தி வந்துள்ளது.

கணவர் ஓராண்டுக்கு முன் மாரடைப்பில் உயிரிழந்த நிலையில் ஆர்த்திபேன் மகன் மற்றும் மகளுடன் நிர்வாகத்தை கவனித்து வந்துள்ளார்.

ஆர்த்திபேன் தனது கணவர், தாய், தந்தை, சகோதரன் ஆகியோரை இழந்தது அவருக்கும் அவரின் பிள்ளைகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி தற்கொலைக்கு காரணமாக இருந்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

தற்கொலை தீர்வல்ல

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். தற்கொலை எண்ணங்கள், மனநல பிரச்சனைகளில் இருந்து விடுபட, உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம்.

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 (24 மணிநேரமும் செயல்படும்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணிநேரம் செயல்படும்)

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் உதவி எண் – 1800-599-0019

X