search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரியங்கா டிப்ரிவால்
    X
    பிரியங்கா டிப்ரிவால்

    மம்தா போட்டியிடும் மேற்கு வங்க இடைத்தேர்தல்- ஆளுங்கட்சி மீது பாஜக பரபரப்பு புகார்

    பவானிபூர் தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று பா.ஜனதா கோரிக்கை விடுத்தது. அதனால் அதனை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்து விட்டது.
    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலத்தில் கடந்த மே மாதம் நடந்த சட்டசபை பொதுத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடித்தது.

    ஆனால் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தோல்வி அடைந்தார். ஆனாலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தேர்தலில் ஆட்சியை பிடித்ததையடுத்து முதல்-மந்திரியாக மம்தா பானர்ஜி பதவி ஏற்றார்.

    முதல்-மந்திரி பதவியை தக்க வைக்க அவர் 6 மாதத்துக்குள் ஏதாவது ஒரு தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதையடுத்து மாநில மந்திரியும், பவானிபூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான சோபன்தேவ் சட்டோ பாத் யாய தனது எம்.எல்.ஏ. பதவியை மம்தா பானர்ஜிக்காக ராஜினாமா செய்தார்.

    இதையடுத்து மேற்கு வங்காளத்தில் காலியாக இருக்கும் பவானிபூர், ஜாங்கி பூர், சம்சேர்கஞ்ச் ஆகிய 3 சட்டசபை தொகுதிகளுக்கு செப்டம்பர் 30-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    பவானிபூர் தொகுதியில் போட்டியிட முதல்-மந்திரி மம்தா பானர்ஜி வேட்புமனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து பா.ஜனதா வேட்பாளராக வக்கீல் பிரியங்கா டிப்ரிவால், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வேட்பாளராக ஸ்ரீஜிவ் விஸ்வாஸ் ஆகியோர் களம் இறங்கினார்கள்.

    பவானிபூர் தொகுதியில் மம்தாபானர்ஜி 2011, 2016-ம் ஆண்டு நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே அனைவரின் பார்வையும் திரும்பியுள்ள பவானிபூர் தொகுதியில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கும், பா.ஜனதாவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் பவானிபூர் தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று பா.ஜனதா கோரிக்கை விடுத்தது. அதனால் அதனை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்து விட்டது.

    இதையடுத்து மேற்கு வங்காளத்தில் பவானிபூர் உள்பட 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடந்தது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளுக்கு வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

    முதல்-மந்திரி மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் தொகுதியில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடந்தது. அங்கு 97 வாக்குச்சாவடி மையங்களில் 287 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. அவைகளில் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.

    அசம்பாவித சம்பவங்களை தடுப்பதற்காக பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. வாக்கு மையங்களில் மத்திய ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    வாக்கு மையத்தை சுற்றி 200 மீட்டர் தொலைவுக்கு 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டு இருந்தது. அந்த பகுதிக்குள் 5 பேருக்கு மேல் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டது.

    மேலும் பட்டாசு, கற்கள், ஆயுதங்கள் ஆகியவற்றை கொண்டு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது.

    இதனிடையே பவானிபூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா செய்தியாளர்களிடம் கூறுகையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் சில இடங்களில் வாக்காளர்களுக்கு 500 ரூபாய் தந்துள்ளனர். இதுதொடர்பாக அதிகாரிகளிடம் தெரிவிக்க உள்ளேன் என்றார்.
    Next Story
    ×