

பாராளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற திரிணாமுல் காங்கிரஸ் அதிருப்தி எம்.பி.க்கள் 20 பேரின் வாக்குகள் முக்கியமானதாக கருதப்படுகிறது.
பாராளுமன்ற சிறப்புக் கூட்டம் வருகிற 20-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்குகிறது. அப்போது தொகுதி மறுவரைவு சட்ட மசோதா தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது. தற்போது இருக்கும் எம்.பி.க்கள் எண்ணிக்கை 50 சதவீதம் உயர்த்தப்படும். 2051 வரை அதில் மாற்றம் இருக்காது என உறுதி அளிக்கப்படும் என்ற மாற்றத்தை மத்திய அரசு மசோதாவில் கொண்டு வந்துள்ளது. மத்திய அமைச்சரவையும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தகுதி நீக்கம் நடவடிக்கையை எதிர்கொண்டு இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்.பி.க்கள் 20 பேர் வாக்களிக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
மசோதாவை நிறைவேற்ற மக்களவையில் உள்ள எம்.பி.க்களில் மூன்றில் இரண்டு பங்கு எம்.பி.க்கள் ஆதரவு தேவை என்பதால் இந்த 20 எம்.பி.க்கள் வாக்களிப்பது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. சகாரிகா கோஸ் கேள்வி எழுப்பியுள்ளார். தகுதி நீக்க நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ள அந்த 20 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாக்களிக்க அனுமதி அளிக்கப்படுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர்களை பதவி நீக்கம் செய்யக்கோரி திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் மனுதாக்கல் செய்து 6 மாதம் ஆகிறது. இதுவரை சபாநாயகர் எந்த முடிவும் எடுக்கவில்லை. இதனால் அவர்கள் சிறப்பு கூட்டத்தில் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள முடியுமா? என்று வினா எழுப்பியுள்ளார்.
அதேவேளையில் மக்களவை செயலாளர் தரப்பு செய்திகளின்படி, முறையாக அவர்களை தகுதி நீக்கம் செய்யும் வரை, வாக்களிப்பதை தடுக்க முடியாது. பாராளுமன்ற விதிகளின் கீழ், பாராளுமன்றத்தின் அனைத்து உரிமைகளையும் தொடர்ந்து பெற முடியும். பாராளுமன்ற நடவடிக்கை, வாக்களிப்பது போன்றவற்றில் ஈடுபடலாம்.
தகுதி நீக்க மனுக்கள் நிலுவையில் இருப்பது மட்டுமே, ஒரு உறுப்பினரின் நாடாளுமன்ற உரிமைகளைத் தானாகவே இடைநிறுத்திவிடாது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் மக்களவை செயலாளர் 20 எம்.பி.க்களுக்கும் தகுதி நீக்க நடவடிக்கை தொடர்பாக பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பியிருந்தார். ஆனால் ஐந்து முறை அவகாசம் நீட்டிக்கப்பட்டு, நவம்பர் 24-ந்தேதி எம்.பி.க்கள் கடிதத்தை சமர்ப்பித்தனர். அவர்கள் பதிலை ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும்.
மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் மம்தா கட்சி தோல்வியடைந்ததும், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் 20 பேர் ககோலி கோஷ் தாஸ்திதர் தலைமையில் என்.சி.பி.ஐ. என்ற கட்சியில் இணைந்தனர். பின்னர் பாஜக தலைமையிலான என்.டி.ஏ. கட்சிக்கு ஆதரவு அளித்தனர்.