2 கி.மீ. தூரத்தை கடக்க 2 மணி நேரம்! மகளின் பள்ளி செல்லும் பயண நேரத்தை பகிர்ந்து தந்தை வேதனை.!

இந்த பதிவை எக்ஸ் தளத்தில் ஹரி என்ற பயனர் பகிர்ந்து வேதனை தெரிவித்துள்ளார்.
Bengaluru traffic
Published on

போக்குவரத்து நெரிசல்

சாலைகளும் போக்குவரத்து நெரிசலும் சிக்கலாகும்போது, ​​ஒரு சிறிய தூரத்தைக் கடப்பதற்கே சில சமயங்களில் அதிக நேரம் ஆகிவிடும். இந்த சூழலில் பெங்களூருவைச் சேர்ந்த ஒருவர், தனது மகளின் பள்ளிப் பேருந்துப் பயணம் குறித்த விரக்தியான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

விரக்தி பதிவு

பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பள்ளி பேருந்தில் சென்ற தனது மகள் 2 கிலோமீட்டர் தூரத்தை கடக்க 2 மணி நேரம் ஆனதாக தந்தை ஒருவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவின் வர்தூர்–கஞ்சூர் சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தனது மகள் பள்ளி முடிந்து பேருந்தில் வீடு திரும்பியபோது, கடுமையான போக்குவரத்து நெரிசலில் பேருந்து சிக்கியுள்ளது. வெறும் 2 கி.மீ. தூரத்தை கடக்க சுமார் 2 மணி நேரம் ஆனதாக அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

வேதனை

இதுகுறித்து ஹரி என்ற அந்த தந்தை வெளியிட்டுள்ள பதிவில், மகள் பேருந்தில் சிக்கியிருந்த அந்த 2 மணி நேரமும் தான் மிகவும் உதவியற்ற நிலையில் காத்திருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

தானும் தனது மனைவியும் மாதந்தோறும் லட்சக்கணக்கில் வரி செலுத்துவதாகவும், மகளின் பள்ளிக்கு அருகில் வீடு இருக்க வேண்டும் என்பதற்காக பெரிய அளவில் வீட்டுக்கடன் பெற்றதாகவும் அவர் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பான சாலை வேண்டும்

சாலையின் நிலை மற்றும் போக்குவரத்து நெரிசல் குறித்து பொதுமக்கள் தொடர்ந்து சமூக வலைத்தளங்கள், மின்னஞ்சல் புகார்கள் மூலம் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தும் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த பதிவில் போக்குவரத்து நெரிசலை விட , ஒரு பொறுப்புள்ள குடிமகனாக செய்ய வேண்டிய அனைத்தையும் செய்த போதிலும், என் சொந்த குழந்தையைப் பாதுகாக்க எனக்கு சிறிதும் சக்தி இல்லாமல் போய்விட்டது என்ற உணர்வுதான் என்னை மிகவும் மனம் உடைய செய்ததாக அவர் பதிவிட்டுள்ளார்.

இவரின் இந்த பதிவிற்கு சமூக ஊடகங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com