பட்ஜெட் அறிவிப்புகள் மூலம் மக்களை திசை திருப்ப முடியாது - நாராயணசாமி

மத்திய பட்ஜெட் மக்களை ஏமாற்றும் பட்ஜெட். மக்களை திசை திருப்ப நினைத்தாலும் 2019ல் பா.ஜனதா படுதோல்வி அடையும் என்று புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார். #Budget2019 #Narayanasamy
பட்ஜெட் அறிவிப்புகள் மூலம் மக்களை திசை திருப்ப முடியாது - நாராயணசாமி
Published on

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

பாராளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் என்ற பெயரில் நீண்டகால திட்டங்களை மத்திய மந்திரி பியூஷ்கோயல் அறிவித்துள்ளார். 11 ஆண்டுக்கு பட்ஜெட்டில் அறிவிப்புகளை சொல்லியுள்ளார்.

2020-2025 வரை திட்டங்களை சொல்லி உள்ளார். முழு பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் என்றால் ஒரு ஆண்டுக்கான நிதி ஆதாரம் எவ்வளவு? துறைகளுக்கு எவ்வளவு செலவாகும்? என தெரிவிக்க வேண்டும்.

இடைக்கால பட்ஜெட் என்றால் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் எவ்வளவு செலவிட வேண்டும் என்பதை கூற வேண்டும். காலக்கெடுவை மீறி எந்த திட்டத்தையும் அறிவிக்கக்கூடாது.

இதற்கு தேவையான தொகை சுமார் ரூ.80 ஆயிரம் கோடி. பாராளுமன்ற தேர்தலை முன்வைத்து திட்டத்தை அறிவித்தால் விவசாயிகள் நம் பக்கம் திரும்புவார்கள் என்ற எண்ணத்தோடு பிரதமர், நிதி மந்திரி ஆகியோர் இத்திட்டத்தை அறிவித்துள்ளனர்.

தமிழகம், புதுவையில் பா.ஜனதா, ஆதரவு கட்சிகள் பட்ஜெட் அறிவிப்பை பாராட்டி பேசி வருகின்றன.

உண்மையில் நிதி ஆதாரத்தை பட்ஜெட்டில் நிதி மந்திரி ஏன் அறிவிக்கவில்லை? விவசாயிகளுக்கு சலுகை செய்வதாக பிரதமர் கூறுகிறார்.

4 ஆண்டு 9 மாதமாகியுள்ளது. ஆயிரக்கணக்கான விவசாயிகள் இறந்துள்ளனர். மத்தியபிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் பா.ஜனதா ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை நடந்தது.

அப்போது எதையும் அறிவிக்காத பிரதமர், விவசாய குடும்பத்தை சந்திக்காத பிரதமர், தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தியபோது அவர்களின் கடனை ரத்து செய்யாத பிரதமர், தற்போது மட்டும் விவசாயிகள் மீது கரிசனம் காட்டுவதன் காரணம் என்ன? இத்திட்டம் விவசாயிகளுக்கு பலன் தருமா? என்பது கேள்விக்குறி.

புதுவையில் விவசாயிகள் கடனை ரத்து செய்தோம். ராகுல்காந்தி உத்தரவின்பேரில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட காங்கிரஸ் ஆட்சி நடத்தும் மாநிலங்களில் விவசாயிகள் கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் கூட்டணி ஆட்சி கடனை ரத்து செய்துள்ளது. மத்திய அரசு விவசாயிகள் வாங்கிய கடனை ரத்து செய்வோம் என அறிவிக்க தயாரா? இதைத்தான் விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். இதை செய்தால்தான் விவசாயிகள் வாழ்க்கை வளம்பெறும். இந்த பட்ஜெட் மக்களை ஏமாற்றும் பட்ஜெட். மக்களை திசை திருப்ப நினைத்தாலும் 2019-ல் பா.ஜனதா படுதோல்வி அடையும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com