100 முட்டை வாங்கினால் ரூ.30 குறைப்பு- நாமக்கல்லில் திடீர் சலுகை அறிவிப்பு

நாமக்கல்லில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் வியாபாரிகள் பயன்பெறும் வகையில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில் 100 முட்டை வாங்கினால் ரூ.30 குறைக்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் முட்டை
நாமக்கல் முட்டை
Published on

சேலம்:

கொரோனா தொற்று அதிகரிப்பால் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது முட்டை விற்பனை மிகவும் சரிந்தது.

பின்னர் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் முட்டையின் நுகர்வு படிப்படியாக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றை தடுக்க புரதச்சத்து மிக்க உணவு பொருளான முட்டையை சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைப்பதால் தற்போது அவற்றின் தேவை அதிகரித்துள்ளது.

இதனால் கடந்த வாரம் ரூ.4.15 ஆக இருந்த முட்டை விலை ஒரே வாரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 5.25 ஆக உயர்ந்தது. இதனால் நாமக்கல் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் சில்லரை விற்பனை கடைகளில் முட்டை விலையை ரூ.6 வரை உயர்த்தி விற்பனை செய்து வருகிறார்கள். சில இடங்களில் அதிகபட்சமாக ரூ.8 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. திடீர் விலை உயர்வால் முட்டை வாங்குவோர் சற்று தயக்கம் காட்டுகிறார்கள்.

முட்டை விலையின் உயர்வால் சாதாரண உணவகங்களில் முட்டை கலந்த உணவு பொருட்கள் ரூ.2 முதல் 5 வரை உயர்ந்துள்ளது. அவற்றை விரும்பி உண்பவர்களும் தவிர்க்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் வரும் நாட்களில் பண்ணைகளில் முட்டைகள் தேங்காதவாறு தடுக்கும் வகையில் மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என கோழிப்பண்ணையாளர்கள் தரப்பில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பாளர்களிடம் வலியுறுத்தப்பட்டது.

இது தொடர்பாக நாமக்கல்லில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் வியாபாரிகள் பயன்பெறும் வகையில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி பண்ணைகளில் நேரிடையாக கொள்முதல் செய்யும் வியாபாரிகளுக்கு 100 முட்டைக்கு 30 ரூபாய் குறைத்துக் கொள்ளவும் உடனடியாக அதற்கான தொகையை வழங்குவோருக்கு மேலும் கூடுதலாக ரூ.5 குறைத்துக் கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.

இதன் மூலம் வெளிச் சந்தைகளில் ரூ.6க்கு விற்பனை செய்யப்படும் முட்டையின் விலை ஓரளவு குறைய வாய்ப்புள்ளதாக அந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனால் வரும் நாட்களில் கடைகளில் முட்டை விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com