பா.ஜ.க.வில் கடைசி தொண்டனாக இருந்து கட்சி பணியாற்றுவேன்: நயினார் நாகேந்திரன் பேட்டி

பா.ஜ.க.வில் எந்தவித பொறுப்பும் வேண்டும் என்று நான் கேட்கவில்லை. கடைசி தொண்டனாக இருந்து கட்சியை வளர்ப்பேன் என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.
பா.ஜ.க.வில் கடைசி தொண்டனாக இருந்து கட்சி பணியாற்றுவேன்: நயினார் நாகேந்திரன் பேட்டி
Published on

நெல்லை:

அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் நேற்று அ.தி.மு.க.வில் இருந்து விலகி, டெல்லியில் பா.ஜ.க.தேசிய தலைவர் அமித்ஷா முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.

இன்று நெல்லைக்கு வந்த நயினார் நாகேந்திரன் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட அ.தி.மு.க.வை ஜெயலலிதா எக்கு கோட்டையாக மாற்றி இந்தியாவிலேயே 3-வது பெரிய கட்சியாக உருவாக்கினார். அவரது மறைவிற்கு பிறகு அ.தி.மு.க.வில் மக்கள் விரும்பும் தலைவர்கள் இல்லை.

இருக்கின்ற ஒரு சிலரும் கட்சியை கைப்பற்றி பிளவு ஏற்படுத்தி தேவையற்ற செயல்களில் இறங்கி உள்ளனர். அ.தி.மு.க.வில் நடக்கும் அதிகார மோதல்கள் பொதுமக்கள் அனைவருக்கும் தெரியும். இதனால் இனியும் அ.தி.மு.க.வில் இருந்தால் மக்கள் எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என்று அதில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்துள்ளேன்.

ஜெயலலிதாவுக்கு பிறகு இந்திய அளவில் பிரதமர் மோடி மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். காங்கிரஸ், தி.மு.க. ஊழல்கள் நிறைந்த கட்சி. மோடிக்கு தற்போது 67 சதவீத ஆதரவு உள்ளது. அவரது ஆட்சியில் எந்தவித ஊழலும் நடைபெறவில்லை. நேர்மையான ஆட்சியை நாட்டு மக்களுக்கு கொடுத்து கொண்டு இருக்கிறார்.

தமிழகத்தில் பா.ஜ.க. ஏற்கனவே கால்ஊன்றி விட்டது. தென் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி வெற்றிக்கு விதையாக செயல்படுவேன். பா.ஜ.க.வில் எந்தவித பொறுப்பும் வேண்டும் என்று நான் கேட்கவில்லை. கடைசி தொண்டனாக இருந்து கட்சியை வளர்ப்பேன்.

நான் பா.ஜ.க.வில் சேர்ந்ததற்கு ஏராளமானவர்கள் வாழ்த்து தெரிவித்து ஆதரவு அளித்துள்ளனர். தென் மாவட்டங்களை சேர்ந்த மேலும் பலர் என்னை பின்தொடர்ந்து பா.ஜ.க.வுக்கு வருவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com