நாகலாந்து சட்டசபை தேர்தல் - ஒரு இடத்தை கூட பிடிக்காமல் வாஷ் அவுட் ஆன காங்கிரஸ்

வடகிழக்கு மாநில தேர்தல்களில் நாகலாந்து மாநிலத்தில் காங்கிரஸ் ஒரு இடத்தை கூட பிடிக்க முடியாமல் போனது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #nagalandpoll #congress
நாகலாந்து சட்டசபை தேர்தல் - ஒரு இடத்தை கூட பிடிக்காமல் வாஷ் அவுட் ஆன காங்கிரஸ்
Published on

கோஹிமா:

நாகாலாந்தில் (போட்டியின்றி வெற்றி பெற்றவரையும் சேர்த்து) மொத்தம் உள்ள 60 இடங்களில் ஆளும் நாகா மக்கள் முன்னணிக்கு 27 இடங்களும், பாரதீய ஜனதாவுக்கு 12 இடங்களும், அதன் கூட்டணி கட்சியான தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சிக்கு 17 இடங்களும் கிடைத்தன. தேசிய மக்கள் கட்சிக்கு 2 இடங்களும், ஐக்கிய ஜனதாதளத்துக்கு ஒரு இடமும் கிடைத்தன. ஒரு தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றார்.

நாகாலாந்தில் ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 31 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. தனிப்பட்ட முறையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் தொங்கு சட்டசபை ஏற்பட்டு உள்ளது. அதிக இடங்களில் வெற்றி பெற்ற நாகா மக்கள் முன்னணி பாரதீய ஜனதாவுடன் இணைந்து ஆட்சி அமைக்க விருப்பம் தெரிவித்து உள்ளது. எனவே அங்கு பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சி அமைகிறது.

சட்டசபை தேர்தலுக்கு முன்பு நாகா மக்கள் முன்னணியும், பாரதீய ஜனதாவும் ஒரே கூட்டணியில் இருந்தன. கருத்து வேறுபாடு காரணமாக கூட்டணி உடைந்ததால், பாரதீய ஜனதா, தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. இப்போது ஆட்சி அமைப்பதற்காக நாகா மக்கள் முன்னணியுடன் பாரதீய ஜனதா மீண்டும் கூட்டணி ஆட்சி அமைக்கிறது.

இந்நிலையில், இந்த தேர்தலில் 23 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. நேற்று வெளியான தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு பாதகமாக வரத் தொடங்கியதும், டெல்லியில் இருந்து மேலிட தேர்தல் பார்வையாளர்களாக வந்திருந்த காங்கிரஸ் தலைவர்கள் சிலர் நாகலாந்தை விட்டு வெளியேற தொடங்கி விட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #tamilnews #nagalandpoll #congress 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com