

திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த மேட்டுப்பாளையம், மாதா கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு, மினி ஆட்டோ டிரைவர். இவரது மனைவி வத்சலா. இவர்களுக்கு யாஷினி (எ) அனான்சியா (வயது 6) என்ற மகளும் 3 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இதில் யாஷினி அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தாள்.
கடந்த 23-ந் தேதி சிறுமி யாஷினிக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் காய்ச்சல் குறையாததால் யாசினியின் உடல் நிலை மோசம் அடைந்தது. இதனை அடுத்து மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சிறுமி யாஷினி பரிதாபமாக இறந்து போனார்.
இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-
நாமக்கல் முதல் திருச்செங்கோடு வரை சாலை விரிவாக்க பணிக்காக மூடப்பட்ட சாக்கடை கடந்த 6 மாதகாலமாக மூடியே கிடப்பதால் சாக்கடை நீர் தேங்கி புழுக்கள் நெளிகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு இன்று ஒரு சிறுமி பலியாகும் நிலை ஏற்பட்டு உள்ளது.
அதே போல் பயன் பாட்டில் இல்லாத ஒரு கட்டிடம் மாதா கோவில் அருகே லார்வா புழுக்கள் நெளியும் நிலையில் தேங்கி நிற்கும் மழை நீர் ஆகியவற்றால் தொற்று நோய் பரவம் அபாயம் உள்ளது. உடனே நடவடிக்கை எடுத்து மற்றவர்களை காக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த எலச்சிபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேசை பொதுமக்கள் முற்றுகையிட்டு சரமாரியாக கேள்விகள் கேட்டனர். சாலை விரிவாக்க பணியின் போது மூடப்பட்ட சாக்கடை 6 மாதமாக திறக்கப்படவில்லை என புகார் தெரிவித்தனர். உடனடியாக சாக்கடைகள் செல்லவும் தேங்கி உள்ள மழை நீரை அகற்றவும் நடவடிக்கை எடுப்பதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் பொதுமக்களுக்கு உறுதி அளித்ததை அடுத்து முற்றுகை போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.