ஆம்பூர் அருகே மர்ம நோய் தாக்கி 100 ஆடுகள் பலி - கால்நடைதுறை அதிகாரிகள் ஆய்வு

ஆம்பூர் அருகே மர்ம நோயால் பாதிக்கப்பட்டு 100க்கும் மேற்பட்ட வெள்ளாடுகள் இறந்தன. கால்நடைத்துறையினர் மற்றும் பொது சுகாதாரத் துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
ஆம்பூர் அருகே மர்ம நோய் தாக்கி 100 ஆடுகள் பலி - கால்நடைதுறை அதிகாரிகள் ஆய்வு
Published on

ஆம்பூர்:

ஆம்பூர் அருகே கிராமப் பகுதிகளில் வெள்ளாடுகள் இறந்த சம்பவத்தை தொடர்ந்து கால்நடை மற்றும் சுகாதாரத் துறையினர் அப்பகுதிகளில் முகாமிட்டு ஆய்வு செய்தனர்.

ஆம்பூர் அருகே மிட்டாளம், பைரப்பள்ளி, பந்தேரப்பள்ளி, வன்னிய நாதபுரம், ரகுநாதபுரம், மேக்கனாம்பல்லி, ராள்ளக்கொத்தூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிப்பவர்கள் வெள்ளாடுகளை வளர்த்து வருகின்றனர்.

அதோடு மட்டுமல்லாமல் தமிழக அரசு இலவசமாக வழங்கிய வெள்ளாடுகளையும் வளர்த்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக மர்ம நோயால் பாதிக்கப்பட்டு 100க்கும் மேற்பட்ட வெள்ளாடுகள் இறந்தன.

இந்நிலையில் மிட்டாளம், பைரப்பள்ளி பகுதிகளுக்கு கால்நடைத்துறையினர் மற்றும் பொது சுகாதாரத் துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். கால்நடைத்துறை நோய்கள் புலனாய்வு இணை இயக்குனர் டாக்டர் ஸ்ரீஹரி தலைமையில் கால்நடை டாக்டர்கள் ரமேஷ்குமார், பிரவீன்குமார் உள்ளிட்ட குழுவினரும், பொது சுகாதாரத்துறை வட்டார மருத்துவ அலுவலர் குமார் தலைமையில் மாவட்ட பூச்சியியல் நிபுணர் காமராஜ், வட்டார சுகாதார அலுவலர் ரஷீத், சுகாதார ஆய்வாளர் பிரேம் உள்ளிட்ட குழுவினரும் ஆய்வு மேற்கொண்டனர்.

இதுகுறித்து கால்நடை துறையின் நோய்கள் புலனாய்வு பிரிவு இணை இயக்குனர் ஸ்ரீஹரி கூறியதாவது:-

வழக்கத்தை காட்டிலும் அதிக பனிப்பொழிவே வெள்ளாடுகள் இறப்புக்கு காரணம். திறந்த வெளியில் உள்ள பட்டிகளில் வெள்ளாடுகளை அடைக்கக்கூடாது. கூரை மேய்ந்த கொட்டகைகளில் மட்டுமே ஆடுகளை அடைத்து பாதுகாக்க வேண்டும்.

ஆடுகளுக்கு நோய் தாக்குதல் அறிகுறி தென்பட்டால் உடனடியாக கால்நடை மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். நோய் தாக்கி வெள்ளாடுகள் இறந்தால் அவற்றை குழி தோண்டி புதைக்க வேண்டும். உணவுக்காக சம்மந்தப்பட்ட வெள்ளாட்டின் இறைச்சியை பயன்படுத்தக் கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், நோய் தாக்குதலுக்கு ஆளான வெள்ளாட்டு கொட்டகைகளை பார்வையிட்டனர். வெள்ளாடுகளின் சளி, சாணம் போன்றவற்றை பரிசோதனைக்காக எடுத்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com