மியான்மர் கலவரத்தில் ஈடுபட்ட 370 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றதாக ராணுவ கமாண்டர் தகவல்

மியான்மர் நாட்டில் நடந்த கலவரத்தில் 370 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர் என அந்நாட்டு ராணுவ கமாண்டர் தெரிவித்துள்ளார்.
மியான்மர் கலவரத்தில் ஈடுபட்ட 370 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றதாக ராணுவ கமாண்டர் தகவல்
Published on

யங்கூன்:

மியான்மரில் வங்காள தேச எல்லையில் மாகாணம் உள்ளது. இங்கு ரோகிங்யா இன முஸ்லிம்கள் அதிக அளவில் உள்ளனர். ஆனால் மியான்மரில் அவர்கள் மைனாரிட்டியாக உள்ளனர். அங்கு மெஜாரிட்டியாக இருக்கும் புத்த மதத்தினருக்கும், இவர்களுக்கும் இடையே அடிக்கடி இனக் கலவரம் நடந்து வருகிறது.

இதற்கிடையே, கடந்த 10 நாட்களுக்கு முன்பு இங்கு மீண்டும் கலவரம் மூண்டது. அப்போது நடந்த வன்முறை சம்பவங்களில் வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டன. கலவரத்தை அடக்க ராணுவம் குவிக்கப்பட்டது. அப்போது நடந்த துப்பாக்கி சூடு மற்றும் வன்முறையில் ஏராளமானோர் உயிரிழந்தனர். உயிர் பிழைக்க 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வங்காள தேசத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

அதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வங்காள தேச எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். கடந்த மாதம் (ஆகஸ்டு) 30-ம் தேதி வரை கலவரக்காரர்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியது.

அதில் பலியானவர்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டன. அவற்றில் 370 பேர் தீவிரவாதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் 9 பேர் உயிருடன் பிடிபட்டுள்ளனர். அவர்களுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 15 ராணுவ வீரர்களும், 14 பொது மக்களும் உயிரிழந்துள்ளனர். இந்த தகவலை மியான்மர் தலைமை ராணுவ கமாண்டர் மின் ஆங் கிளயிங் தனது ‘பேஸ்புக்‘ பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் நடந்த தாக்குதலில் 78 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அது உறுதி செய்யப்படவில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com