விஷால் வேட்பு மனு பிரச்சனையில் பெரிய அளவில் குளறுபடி: முத்தரசன்

நடிகர் விஷால் வேட்பு மனு பிரச்சனையில் பெரிய அளவில் குளறுபடி ஏற்பட்டுள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
Published on

அம்பேத்கார் நினைவு நாளையொட்டி சேலத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை இயற்றிய அம்பேத்காரின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் 25 ஆண்டுகளுக்கு முன்பு பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதை மதசார்பற்ற கொள்கையை இடித்த நாளாகவே கருதுகிறோம்.

நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து முன்னேற்ற பாதையை நோக்கி பொருளாதார வளர்ச்சியை கொண்டு செல்ல உறுதி ஏற்போம். மாநில அரசு மத்திய அரசிடம் அனைத்து உரிமைகளையும் பறிகொடுத்துள்ளது.

குமரி மாவட்டத்தில் புயல் பாதிப்பு குறித்து இதுவரை மாநில அமைச்சர்கள் யாரும் முறையாக கணக்கெடுப்பு நடத்தவில்லை. 1000-க்கும் மேற்பட்ட மீனவர்களின் கதி என்ன? என்பது மர்மமாகவே உள்ளது. இதுவரை இன்னும் அங்கு இயல்பு நிலை திரும்பவில்லை.

போதுமான முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தான் இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. புயல் தாக்கப்பட்ட குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் என அறிவித்து உரிய நிவாரண நிதி மற்றும் பாதுகாப்பு வழங்க வேண்டும். புயல் பாதிப்பில் மாநில அரசு பொறுப்பற்ற வகையில் செயல்படுகிறது. கேரள அரசின் செயல்பாடு சிறப்பாக இருக்கிறது என அங்குள்ள மத்திய மந்திரி ஒருவர் கூறியிருக்கிறார்.

ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்தால் தி.மு.க. வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. தேர்தல் ஆணையம் தேர்தலை முறையாக நடத்துமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.


விஷால் வேட்பு மனு பிரச்சனையில் பெரிய அளவில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக யாரோ நிர்பந்தம் செய்துள்ளனர். அதனால் தான் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக தெரிகிறது.

தேர்தல் ஆணையம் மேல் மக்கள் நம்பிக்கையை இழந்து வருகிறார்கள். இதே நிலைமை நீடித்தால் எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும். திமுக வேட்பாளரை ஆதரித்து ஆர்.கே.நகரில் இன்னும் ஓரிரு நாளில் தேர்தல் பிரசாரம் செய்வேன். வகுப்பு வாத சக்திகளுக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து குரல் கொடுப்போம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com