

ஜெய்ப்பூர்:
சமீபத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் காஷ்மீர் எல்லைக்குள் புகுந்து இந்திய ராணுவ வீரர்கள் இருவரை பிடித்து அவர்களை சித்ரவதை செய்து கொன்றனர். அதுமட்டுமல்லாமல் அவர்கள் இருவரின் தலையையும் துண்டித்திருந்தனர். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இறந்த ராணுவ வீரர் ஒருவரின் மகள் எனது தந்தை கொடூரமாக கொன்றதற்கு பழிவாங்க 10 பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் தலையை துண்டிக்க வேண்டும் என்று கூறினார்.
விசுவ இந்து பரிஷத் தலைவர் பிரவின் தோகாடியா 100 பாகிஸ்தான் வீரர்களின் தலையை துண்டிக்க வேண்டும் என்று கூறினார். இவ்வாறு பலரும் ஆவேசமாக கருத்துக்களை வெளியிட்டனர்.
இந்த நிலையில் டெல்லியை சேர்ந்த முஸ்லிம் அமைப்பு ஒன்று பாகிஸ்தான் வீரர்களின் தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ.5 கோடி பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. டெல்லியில் முஸ்லிம் யுவ அதங்குவாத் விரோதி சமீதி என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக முகமது ஷகில் சைபி இருந்து வருகிறார்.
அவர் ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீர் தர்காவில் வழிபாடு செய்வதற்காக வந்திருந்தார். அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
பாகிஸ்தான் வீரர்களின் தலையை கொண்டு வருபவர்களுக்கு வழங்கப்படும் ரூ.5 கோடி நிதியை எனது அமைப்பின் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் திரட்டி வழங்குவேன் என்றும் தெரிவித்தார்.