

அவுரங்காபாத்:
இந்தியாவில் மொத்தம் 63 திறந்த வெளி சிறைச்சாலைகள் உள்ளன. திறந்தவெளி சிறைச்சாலை என்பது நல்ல உடல் மற்றும் மனநலத்துடன் இருக்கும் சிறைக் கைதிகளை நம்பிக்கையின் அடிப்படையில் குறைந்த மேற்பார்வை மற்றும் காவலுடன் அறைகளில் வைத்து பூட்டாமல் அளவான சுதந்திரத்துடன் வைத்திருக்கும் ஒரு முறைசாராச் சிறைச்சாலை ஆகும்.
குற்றவாளிகளுக்கு தொழிற் பயிற்சிகள் தருதல், விவசாயம் போன்ற ஏதேனும் ஒரு தொழிலை மேற்கொள்ள அனுமதித்தல் போன்றவை இவ்வகை சிறைச்சாலைகளின் சிறப்பம்சம் ஆகும்.
இந்நிலையில், மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள திறந்த வெளி சிறைச்சாலையில் இருந்து கொலைக்குற்றவாளி ஒருவன் தப்பித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாசிக் மாவட்டத்தை சேர்ந்த அகலான் ரிசு போஸ்லே என்பவர் கொலை வழக்கில் கடந்த 2011-ம் ஆண்டு குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டார். நாசிக் நகரில் உள்ள சிறையில் தண்டனை அனுபவித்து வந்த அகலான் கடந்த ஜூன் மாதம் 22-ம் தேதி அவுரங்காபாத் நகரில் உள்ள பைதான் திறந்தவெளி சிறைக்கு மாற்றப்பட்டார்.
சிறை வளாகப் பகுதியில் உள்ள வெங்காய தோட்டத்தில் நேற்று வேலை செய்துகொண்டிருந்த அகலான் போலீசார் சற்று அசந்திருந்த நேரத்தில் சிறையின் சுவரை ஏறிகுதித்து தப்பியோடி விட்டார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
இந்த ஆண்டில் மட்டும் பைதான் சிறையில் இருந்து 4 குற்றவாளிகள் தப்பியோடியுள்ளனர். அவர்களில் ஒருவரை போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.