போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை கைவிடவேண்டும்: எம்.ஆர்.விஜயபாஸ்கர் வேண்டுகோள்

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்பவேண்டும் என போக்குவரத்து துறை மந்திரி எம்.ஆர்.விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். #TNTransportstrike #Busstrike #MRVijayabasker
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை கைவிடவேண்டும்: எம்.ஆர்.விஜயபாஸ்கர் வேண்டுகோள்
Published on

சென்னை:

தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள், அரசின் ஊதிய ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து நேற்று இரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். தொ.மு.ச., சி.ஐ.டி.யு. உள்ளிட்ட முக்கிய தொழிற்சங்கங்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளதால் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வாராகி என்ற வழக்கறிஞர் ஒரு வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், ‘போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தினால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே ஊழியர்கள் பணிக்கு திரும்ப நீதிமன்றம் உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு இன்று பிற்பகல் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். உடனடியாக பணிக்கு திரும்பவில்லை எனில் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று உத்தரவு பிறப்பித்தனர். 

இந்நிலையில், போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்பவேண்டும் என போக்குவரத்து துறை மந்திரி எம்.ஆர்.விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை மந்திரி எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சில தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை திசைதிருப்பி வேண்டுமென்றே போராட்டத்தில் ஈடுபடுத்தி வருகின்றன. அவர்களது தூண்டுதலின் பேரில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் பாதிப்பு அடைந்து வருகின்றனர். எனவே, வேலைநிறுத்தத்தை கைவிட்டு தொழிலாளர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும்.

சேவை மனப்பான்மையுடன் தொழிலாளர்கள் பணிக்கு திரும்பவேண்டும். மக்களுக்கு தொடர்ந்து பேருந்து சேவையை வழங்கவே தனியார் டிரைவர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டால் அரசு நடவடிக்கை எடுக்க தயங்காது. 

வேலைநிறுத்தத்தை கைவிடாவிட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். முதலமைச்சரின் ஒப்புதல் பெற்றே ஒப்பந்தம் கையெழுத்தானது. பேருந்து கட்டண உயர்வு அரசின் கொள்கை முடிவு. அதுகுறித்து முதலமைச்சர் முடிவு செய்வார்.

இவ்வாறு அவர் கூறினார்.#TNTransportstrike #Busstrike  MRVijayabaskar #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com