மாயார் ஆற்றில் ராட்சத முதலையால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

மாயார் ஆற்றில் ராட்சத முதலை ஒன்று வலம் வருகிறது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மாயார் ஆற்றில் ராட்சத முதலையால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை
Published on: 

மசினகுடி:

நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகம் 321 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டது. இந்த வனப்பகுதிகளில் காட்டு யானை, சிறுத்தைப்புலி, புலி, புள்ளி மான்கள், கரடி உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளை காண அனுமதிக்கப்படுவதால், தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் முதுமலைக்கு வந்து வாகன மற்றும் யானை சவாரி சென்று வனப்பகுதிகளையும், வனவிலங்குகளையும் கண்டு ரசித்து வருகின்றனர்.

முதுமலை வனப்பகுதிகளில் வனவிலங்குகள் மட்டுமே இருந்து வந்த நிலையில், தற்போது அங்குள்ள மாயார் ஆற்றில் முதலைகளும் காணப்படுகின்றன. இதனை அந்த வழியாக வரும் கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்ததுடன் பீதியில் உள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஆறுகள் மற்றும் அணைகளில் மீன்கள், ஆமைகள், நீர் நாய்கள் உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்கள் மட்டுமே உள்ள நிலையில், மாயார் ஆற்றில் முதலைகள் காணப்படுவது அனைவரையும் வியப்படைய செய்துள்ளது.

தற்போது தெப்பக்காடு பாலத்தின் அடிப்பகுதியில் ஓடும் மாயார் ஆற்று நீரில் ஒரு ராட்சத முதலை தினமும் வந்து செல்வதை வாடிக்கையாக கொண்டு உள்ளது. முதலை வரும் பகுதியின் அருகே வளர்ப்பு யானைகள் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் பாகன்கள் மூலம் குளிப்பாட்டப்படுகிறது. மேலும் அங்கு வசித்து வரும் ஆதிவாசி மக்கள் குடிநீர் எடுக்க மாயார் ஆற்றுக்கு தினமும் வந்து செல்கின்றனர். ஆனால், அந்த முதலை யாருக்கும் எந்த தொந்தரவும் செய்யாமல் வாழ்ந்து வருகிறது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

மாயார் ஆற்றில் முதலைகள் இருப்பது சில மாதங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. மாயார் ஆறு கூடலூர் பகுதியில் உற்பத்தியாகி மாயார் பள்ளத்தாக்கு வழியாக பால்தட்டி, மங்கலப்பட்டி, தெங்குமரஹாடா, கள்ளம்பாளையம் வழியாக பவானி சாகர் அணையில் கலக்கிறது. இதுவரை பால்தட்டி, மங்கலப்பட்டி ஆகிய அடர்ந்த வனப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் முதலைகள் பல ஆண்டுகளாக இருக்கின்றன. தற்போது மாயார் ஆற்றில் முதலை காணப்படுவதால் அங்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com