தலைவாசல் அருகே 3 மாத கைக்குழந்தையை கொன்று தாய் தூக்குப்போட்டு தற்கொலை

தலைவாசல் அருகே 3 மாத கைக்குழந்தையை கொன்று தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தற்கொலை
தற்கொலை
Published on

தலைவாசல்:

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா உமையாள்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகள் தவமணி (வயது27). இவருக்கும், தலைவாசல் அருகே சார்வாய்புதூர் தேவேந்திரன்நகர் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (35) என்பவருக்கும் திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகிறது. மணிகண்டன் மூட்டை தூக்கும் தொழிலாளி.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து 3 மாதங்களாக தவமணி தாய் வீட்டில் இருந்து வந்தார். அவரை கடந்த 2 நாட்களுக்கு முன்பு தாய் வீட்டிலிருந்து கணவர் வீட்டுக்கு அழைத்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை மகளும், பேத்தியும் இறந்து விட்டதாக செல்போன் மூலம் பெரியசாமிக்கு உறவினர்கள் தகவல் தெரிவித்து உள்ளனர். இதை அறிந்த பெரியசாமி, உறவினர் தனசேகர் என்பவருடன் சார்வாய்புதூர் கிராமத்திற்கு புறப்பட்டு வந்துள்ளார். வீட்டில் வந்து பார்த்தபோது தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது.

ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தபோது 3 மாத கைக்குழந்தையுடன் தவமணி தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

குழந்தையை கொன்று விட்டு தாய் தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் மகள் தவமணி சாவில் சந்தேகம் உள்ளதாக தந்தை பெரியசாமி தலைவாசல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com