ரூ.1 கோடி கேட்டு பிரான்ஸ் அரசு மீது தாய், மகள் வழக்கு

பிரான்சில் காற்று மாசுபாட்டால் ஏற்பட்ட உடல்நல பாதிப்புக்கு நஷ்ட ஈடாக ஒரு கோடி ரூபாய் கேட்டு தாய்-மகள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
ரூ.1 கோடி கேட்டு பிரான்ஸ் அரசு மீது தாய், மகள் வழக்கு
Published on

பாரிஸ்:

பிரான்ஸ் நாட்டின் செயின்ட் ஓயன் நகரத்தில் வசித்த தாய்- மகள் இருவரும் கிழக்கு பாரிசில் உள்ள மாண்ட்ரெயில் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், தாங்கள் வசிக்கும் நகரத்தின் காற்று மாசுபாட்டால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான இழப்பீட்டுத் தொகையாக 160000 யுரோக்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் 1.24 கோடி) வழங்க வேண்டும் எனவும் கூறியிருந்தனர்.  

மாசுபாட்டை தடுக்க அரசு எந்தவித பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்கவில்லை, முக்கியமாக கடந்த டிசம்பர் 2016 ல் பாரிஸ் மிகவும் அதிகமான மாசுபாட்டை சந்தித்த போதும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும் அவர்கள் கூறியிருந்தனர்.

இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடும்போது, தங்கள் கட்சிக்காரர்கள் இருவருமே சுவாசக் கோளாறுகளால் பாதிக்கபட்டுள்ளதாகவும், மேலும் அப்பகுதியிலிருந்து நியூ ஆர்லியன்ஸ் பகுதிக்கு இடம்பெயர்ந்ததிலிருந்து உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். பிரான்ஸ் அரசு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை எனவும் வாதிட்டார்கள்.  

இதுபற்றி சுவாச பாதுகாப்பு (அரசு சாரா) அமைப்பின் தலைவர் செபாஸ்டின் வ்ரே கூறும்போது, “50-க்கும் மேற்பட்ட மக்கள் அரசுக்கு எதிராக இதுபோன்ற வழக்குகளை தொடுத்து வருகின்றனர். இந்த வழக்கு வெற்றியின் பாதையில் உள்ளது. 8 வருடங்களுக்கு முன்பு இதை நான் நிறுவும்போது, மாசு அதிகரிப்பு தொடர்பாக வழக்குகள் வரும் என்றும் நினைத்தோம்” என்றார். இதுபோன்ற வழக்குகள் நீதிமன்றத்திற்கு வருவது இதுவே முதன்முறை என வழக்கறிஞரும் தெரிவித்தார்.

பொது சுகாதார துறை அறிக்கையின்படி, பிரான்சில் ஆண்டிற்கு 48000 பேர் மாசு அதிகரிப்பால் உயிரிழக்கின்றனர். கடந்த டிசம்பர் 2016ல் பத்தாண்டுகளில் காணாத குளிர்கால மாசுபாட்டால் பாரிஸ் நகரம் திணறியது.

2018ம் ஆண்டு பிரான்ஸ் மற்றும் 5 நாடுகள் காற்றின் தரத்தை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளாததால், அந்த நாடுகள் மீது ஐரோப்பிய ஆணைக் குழு  ஐரோப்பிய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com