உ.பி கோரக்பூர் மருத்துவமனையில் கடந்த 3 நாட்களில் மேலும் 61 குழந்தைகள் பலி

உ.பி. கோராக்பூர் மருத்துவமனையில் கடந்த 3 நாட்களில் 61 குழந்தைகள் இறந்துள்ளனர். இதில் மூளைக்காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்றவற்றினால் ஏற்படும் உயிரிழப்பே அதிகமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
உ.பி கோரக்பூர் மருத்துவமனையில் கடந்த 3 நாட்களில் மேலும் 61 குழந்தைகள்  பலி
Published on

கோராக்பூர்:

உத்தரபிரதேச மாநிலம் கோராக்பூரில் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு 2 வாரங்களுக்கு முன்பு ஆஸ்பத்திரியில் நிலவிய ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தன.

இந்த பிரச்சினை நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது சம்பந்தமாக விசாரணை, சஸ்பெண்டு, கைது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் அந்த ஆஸ்பத்திரியில் கடந்த 3 நாளில் 61 குழந்தைகள் இறந்துள்ளன. அவர்களில் 11 பேர் மூளைக்காய்ச்சல் காரணமாகவும், மற்றவர்கள் பல்வேறு காரணங்களாலும் இறந்துள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தில் தற்போது மழை பெய்து வருகிறது. இதனால் நோய் பரவுதலும் அதிகமாக ஏற்பட்டுள்ளது. மூளைச்காய்ச்சலும் அதிகம் பரவியுள்ளது.

இதில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் 500-க்கும் மேற்பட்டோர் கோராக்பூர் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் தான் 61 குழந்தைகள் 3 நாட்களில் இறந்துள்ளனர்.

இதுசம்பந்தமாக கல்லூரி முதல்வர் பி.கே.சிங் கூறும்போது, அனைவருமே நோயின் வீரியம் அதிகமானதால் தான் இறந்துள்ளனர். ஆஸ்பத்திரியில் குழந்தைகளுக்கு உரிய தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன என்று கூறினார்.

இந்த ஆஸ்பத்திரியில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி 1250 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 175 பேர் மூளைச்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள். இந்த மாதத்தில் கடந்த 1-ந்தேதி முதல் இதுவரை 290 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 77 பேர் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள்.

கோராக்பூர் பகுதி நேபாளம் எல்லையையொட்டி அமைந்துள்ளது. அந்த பகுதி முழுவதுமே குழந்தைகளுக்கு மூளைக்காய்ச்சல் நோய் தாக்குதல் அதிகமாக உள்ளது. அதேபோல நேபாளத்திலும் மூளைக்காய்ச்சல் பரவி உள்ளது. அங்கு பாதிக்கப்பட்டவர்களும் இந்த ஆஸ்பத்திரிக்கு வந்து தான் சிகிச்சை பெறுகிறார்கள்.

மூளைக்காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்றவற்றினால் ஏற்படும் உயிரிழப்பே அதிகமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com