

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்பை தொடர்ந்து எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 22-ந் தேதி அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டத்தில், அனைத்துக்கட்சி தலைவர்கள், விவசாய சங்க தலைவர்கள், அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் அடங்கிய குழுவினர் பிரதமர் மோடியை சந்தித்து, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்குமாறு வற்புறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திடீரென்று, தி.மு.க. செயல்தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த வரும்படி அழைத்தார். அதன்படி சென்னை தலைமைச் செயலகத்திற்கு சென்ற மு.க.ஸ்டாலின், முதமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் கூறியதாவது:-
காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உச்ச நீதிமன்றம் தீர்ப்ப வழங்கி இருக்கிறது. இதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்ற அடிப்படையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. அதில், அனைத்துக்கட்சி தலைவர்கள் பிரதமர் மோடியை சந்தித்து, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்குமாறு வற்புறுத்த முடிவு செய்யப்பட்டு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
ஆனால், முதலமைச்சர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களை சந்திக்க பிரதமர் முன்வராதது வேதனை அளிக்கிறது. பிரதமர் தன்னை சந்திக்க மறுப்பதாகவும், துறை அமைச்சரை முதலில் சந்திக்கும்படி கூறியதாகவும் முதலமைச்சர் எங்களிடம் கூறினார்.
அனைத்துக் கட்சி தலைவர்களை சந்திப்பது தொடர்பாக மத்திய அரசிடம் இருந்தும் பிரதமரிடம் இருந்தும் எந்த பதிலும் வரவில்லை. எனவே, மார்ச் 8-ம் தேதி சட்டமன்றத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என நாங்கள் தெரிவித்தோம்.
அப்போது, திங்கட்கிழமை வரை பொறுத்திருக்காம், அதற்குள் பிரதமரிடம் இருந்து பதில் வராவிட்டால், 8-ம் தேதி சட்டமன்றம் கூட்டப்படும் என முதல்வர் உறுதி அளித்துள்ளார்
தமிழக தலைவர்களை பிரதமர் சந்திக்க மறுத்தால் தமிழக எம்.பி.க்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் முதலமைச்சரிடம் வைத்தேன்.