தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி

ஒருநாள் பயணமாக சென்னை வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, கோபாலபுரம் இல்லத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி
Published on

தி.மு.க. தலைவர் கருணாநிதி முதுமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு கோபாலபுரம் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். வீட்டிலேயே அவருக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் அவர் நீண்டகாலமாக பொதுநிகழ்ச்சியில் எதிலும் கலந்துகொள்ளவில்லை.

தற்போது அவரது உடல்நிலை தேறியுள்ள நிலையில், முக்கிய தலைவர்கள் அவரை சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். கடந்த மாதம் கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி பவளவிழா காட்சி அரங்கைப் பார்வையிட்டார். கோபாலபுரம் இல்லத்தில் நடைபெற்ற தனது கொள்ளுப் பேரன் திருமணத்திலும் கலந்துகொண்டார்.

சமீபத்தில் பா.ம.க. தலைவர் ராமதாஸ், கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது அவர் நல்ல உடல்நலத்துடன் நூற்றாண்டைக் கடந்து வாழ வேண்டும் என்று வாழ்த்தினார்.

இந்நிலையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று சென்னை வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, கோபாலபுரம் இல்லத்திற்குச் சென்றார். அவரை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து வரவேற்று அழைத்துச் சென்றார்.

பின்னர் தி.மு.க. தலைவர் கருணாநிதியை பிரதமர் மோடி சந்தித்து, உடல்நலம் குறித்து விசாரித்தார். அவருடன், கவர்னர் பன்வாரிலால் புரோகித், மத்திய மந்திரிகள் பொன் ராதாகிருஷ்ணன், நிர்மலா சீதாராமன், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரும் கருணாநிதியிடம் நலம் விசாரித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com