பஸ் கட்டண உயர்வுடன் எங்கள் சம்பளத்தை ஒப்பிடாதீர்கள்: எம்.எல்.ஏ.க்கள் குமுறல்

பஸ் கட்டண உயர்வுடன் எங்களது சம்பள உயர்வை ஒப்பிடுவது பொருத்தமானதாக இருக்காது என்று எம்.எல்.ஏ.க்கள் கூறினர்.
பஸ் கட்டண உயர்வுடன் எங்கள் சம்பளத்தை ஒப்பிடாதீர்கள்: எம்.எல்.ஏ.க்கள் குமுறல்
Published on

சென்னை:

தமிழ்நாட்டில் கடந்த 19-ந்தேதி அரசு போக்குவரத்துக் கழக பஸ்களின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டது.

இதற்கிடையே எம்.எல்.ஏ.க்களின் சம்பளமும் கணிசமான உயர்த்தப்பட்டுள்ளது.

அரசு கடும் நிதி நெருக்கடியில் இருப்பதால்தான் வேறு வழியின்றி பஸ் கட்டணத்தை உயர்த்தி இருப்பதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் நிதி நெருக்கடி இருக்கும்போது எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டும் சம்பளத்தை உயர்த்தியது ஏன் என்று எதிர்க்கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் கேள்விகளை எழுப்பின.

இதனால் எம்.எல்.ஏ.க்கள் சம்பளத்தை உயர்த்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் தமிழக எம்.எல்.ஏ.க்களோ, தங்களுக்கு உயர்த்தப்பட்ட சம்பள உயர்வு போதுமானதாக இல்லை என்று கூறி வருகிறார்கள்.

எம்.எல்.ஏ.க்கள் இது பற்றி கூறுகையில், “மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் எங்களுக்கு உயர்த்தப்பட்டுள்ள சம்பள விகிதம் மிக மிக குறைவாகும். தற்போது கூட எங்களது சம்பளம் குறைவாகத்தான் உள்ளது. எனவே பஸ் கட்டண உயர்வுடன் எங்களது சம்பள உயர்வை ஒப்பிடுவது பொருத்தமானதாக இருக்காது” என்றனர்.

துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் இது தொடர்பாக கூறியிருப்பதாவது:-

மற்ற மாநிலங்களில் எம்.எல்.ஏ.க்களுக்கு மிக அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் அப்படி இல்லை. மிக மிக குறைவாகவே வழங்கப்படுகிறது.

தற்போது தமிழக எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கப்படும் சம்பளம் நல்ல சம்பள விகிதமாக தெரியலாம். ஆனால் எங்களுக்கு முழுமையாக அது போதாது.

இந்த சம்பளத்துக்காக வருமான வரித்துறையும் எங்களுக்கு விலக்கு அளிப்பதில்லை. எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் பல தடவை கோரிக்கை விடப்பட்டும் வருமான வரித்துறை கண்டு கொள்ளவில்லை.

இவ்வாறு பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com