அமைச்சர் விஜயபாஸ்கர் மன்னிப்பு கேட்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்

அரசு விழாவில் அதிகாரியை அவமானப்படுத்திய அமைச்சர் விஜயபாஸ்கர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்
Published on

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள, செய்தியின் விவரம் வருமாறு:-

புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு விழாவில் மாவட்ட வழங்கல் அதிகாரி அக்பர் அலி என்பவரை, அமைச்சர் விஜயபாஸ்கர் இழிவாகப் பேசி, மேடையில் இருந்து கீழே இறக்கி விட்டுள்ளார்.

புதுக்கோட்டை நகர அ.தி. மு.க. செயலாளர் பாஸ்கர், எம்.எல்.ஏ. ஆறுமுகம் ஆகியோரும் அந்த அதிகாரியைக் கேவலமாகத் திட்டி உள்ளனர்.

தங்களுடைய ஆசைப்படி, தி.மு.க வெற்றியை மறைக்க இந்த அதிகாரி உடந்தையாக இருந்து ஒத்துழைக்கவில்லை என்பதால், பொதுமக்கள் முன்னிலையில், பொறுப்புள்ள அரசு அதிகாரி அவமானப்படுத்தப்பட்டு, மிரட்டப்பட்டுள்ளார்.

அரசு விழாவில், அதிகாரியை அமைச்சரும், எம்.எல்.ஏ.வும் மிரட்டியது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. அவர்கள் இருவரும் அதிகாரி அக்பர் அலியிடம் உடனே பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சியினர் எத்தகைய மிரட்டல் தாண்டவம் ஆடியுள்ளார்கள் என்பதற்கு உதாரணம் இது. சேலத்தில் அரசு அதிகாரி ஒருவரை எம்.எல்.ஏ. ஒருவர் மிரட்டினார். புதுக்கோட்டையில் அமைச்சரே மிரட்டுகிறார்.

கட்சி ஆட்சி இன்று இருக்கும், நாளை போய் விடும். ஆனால் அரசு என்பது என்றும் இருக்கும்.

அதன் அங்கமான அரசு அதிகாரிகளுக்கு உரிய மரியாதையையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்திட வேண்டியது முதலமைச்சர், தலைமைச் செயலாளர் ஆகியோர் பொறுப்பு என்பதை அவர்கள் இருவரும் உணர வேண்டும்.

X

Maalai Malar
www.maalaimalar.com