

சென்னை:
முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் மகனும் வடசென்னை தொகுதி எம்.பி.யுமான டாக்டர் கலாநிதி வீராசாமி - டாக்டர் ஜெயந்தி தம்பதியரின் மகள் டாக்டர் மாளவிகா - டாக்டர் விஷ்ணு பிரசாந்த் திருமணம் வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலசில் இன்று காலை நடந்தது. திருமணத்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசினார். அவர் பேசியதாவது:-
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் 38 பேர் பாராளுமன்றத்துக்கு செல்லும் போது ‘மத்தியில் ஆட்சியில் இல்லை. தமிழ்நாட்டில் ஆட்சியில் இல்லை. இவர்கள் அங்கு போய் என்ன செய்ய போகிறார்கள் என்றார்கள்.
ஆனால் சென்ற முதல் நாளே தமிழ்நாட்டின் குரலை எழுப்பினார்கள். முதல் குரலே தமிழ் வாழ்க என்று ஒலித்தது. அதுவே தமிழ்நாட்டுக்கு கிடைத்த பெருமை. தந்தை பெரியார் வாழ்க, அம்பேத்கார் வாழ்க, அண்ணா வாழ்க, கலைஞர் வாழ்க என்று எழுப்பிய குரல் இந்த இயக்கத்துக்கு கிடைத்த பெருமை.
அது மட்டுமா? காவிரி பிரச்சினை, ஹைட்ரோ கார்பன் பிரச்சினையை தொடர்ந்து எழுப்புகிறார்கள்.
ஏற்கனவே அ.தி.மு.க. சார்பில் 37 பேர் இருந்தார்கள். என்றைக்காவது ஏதாவது பிரச்சினையை எழுப்பியதை கடந்த 5 ஆண்டுகளில் பார்த்தது உண்டா? இல்லை.
ஆனால் பொறுப்பேற்ற உடனே தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பாராளுமன்றத்தில் தி.மு.க. குரல் ஒலிக்க தொடங்கி இருக்கிறது. அதுதான் கலைஞர் உருவாக்கிய இந்த இயக்கம்.
இவ்வாறு அவர் பேசினார்.
திருமண விழாவில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, எம்.எல்.ஏ.க்கள் சேகர்பாபு, ஜெ.அன்பழகன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டு மண மக்களை வாழ்த்தினர்.
திருமண வரவேற்பு விழா இன்று மாலை 6 மணிக்கு நடக்கிறது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் துரைமுருகன், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, எம்.எல்.ஏ.க்கள் ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, சுதர்சனம் மற்றும் முரசொலி நிர்வாக மேலாண்மை இயக்குனர் உதயநிதி ஸ்டாலின், அசோக்நகர் நியூபாண்டியன் டிரேடர்ஸ் பி.டேவிட் பாண்டியன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், அரசியல் கட்சி தலைவர்கள், உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்கள்.