தமிழகத்தில் கவர்னர் ஆட்சிக்கு வாய்ப்பு இருக்கிறது - மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பு வந்தால், கவர்னர் ஆட்சி வர வாய்ப்பு இருக்கிறது என்று கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
தமிழகத்தில் கவர்னர் ஆட்சிக்கு வாய்ப்பு இருக்கிறது - மு.க.ஸ்டாலின்
Published on

தமிழகத்தில் 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பு வந்தால், கவர்னர் ஆட்சி வர வாய்ப்பு இருக்கிறது என்றும், எனவே கட்சி நிர்வாகிகள் தேர்தல் பிரசாரத்துக்கு தயாராகுமாறும் நேற்று நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கடந்த பிப்ரவரி 1-ந் தேதி முதல் கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் மாவட்ட வாரியாக கள ஆய்வு ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார்.

அதன்படி, நேற்று விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த ஊராட்சி, பேரூராட்சி நிர்வாகிகளுடனும், கட்சியின் துணை அமைப்புகளான இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி உள்ளிட்ட அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களை சந்தித்து கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் ஒன்றிய, நகர, மாவட்ட நிர்வாகிகளுடனும், கட்சி முன்னோடிகளுடன் கருத்துகளை கேட்டறிந்தார்.

இந்த ஆலோசனை கூட்டத்தின் போது, கட்சி நிர்வாகிகள் தங்கள் பகுதிகளில் செய்த பணிகள் என்னென்ன? கட்சி பணி குறித்து என்ன திட்டங்கள் கையில் வைத்துள்ளர்கள்? என்பது போன்ற விவரங்களை மு.க.ஸ்டாலின் கேட்டு அறிந்துள்ளார். மேலும் தங்கள் பகுதியில் உள்ள மக்கள் குறைகள் என்ன? கட்சி சார்ந்த குறைகள் என்ன? என்பது குறித்தும் கேட்டு அறிந்தார்.

கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தமிழகத்தில் 18 எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் தீர்ப்பு வந்தால், கவர்னர் ஆட்சிக்கான வாய்ப்பு உள்ளது. 6 மாத காலம் கவர்னர் ஆட்சி நடைபெறும். அதைத் தொடர்ந்து தேர்தல் வரும். எனவே எல்லோரும் தேர்தலுக்கு தயாராக இருங்கள்.

பிரசாரத்தை இப்போதே தொடங்கிவிடுங்கள். தங்கள் பகுதியில் உள்ளவர்கள் எந்த கட்சியினர் என்பதை பார்த்து அவர்களை தி.மு.க. ஆதரவாளர்களாக்க முயற்சி செய்யுங்கள். தமிழக மக்கள் விரும்புவது போல் இந்த ஆட்சியை மாற்றிவிட்டு நாம் ஆட்சி செய்யலாம்.

ஆனால், தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் எம்.எல்.ஏ.க்களுக்கு கப்பம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில், நாம் ஆட்சியை கைப்பற்றினால் நாமும் அவர்களுக்கு கப்பம் கட்ட வேண்டும். இவ்வாறு கப்பம் கட்டி ஆட்சி செய்தால் நன்றாக இருக்குமா? நீங்களே சிந்தியுங்கள்.

எனவே தேர்தல் வரை பொறுத்து இருந்து தேர்தலில் முறையாக வெற்றி பெற்று சிறப்பான ஆட்சி செய்வோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இன்று ஆலோசனை கூட்டம் ஏதும் இல்லை. நாளை (புதன்கிழமை) தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.  #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com