காவிரி டெல்டா விவசாயிகள் கருத்தரங்கம் - மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்

டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக்கோரி தஞ்சாவூரில் 28-ந்தேதி நடக்கும் கருத்தரங்கில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
முக ஸ்டாலின்
முக ஸ்டாலின்
Published on

தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

மத்திய, மாநில அரசுகளின் அலட்சியப் போக்கின் காரணமாக, கடந்த ஏழாண்டு காலத்திற்கும் மேலாக, காவிரி டெல்டா பகுதிகள் வறண்டு கொண்டிருக்கின்றன.

அதனால் விவசாயிகள் தற்கொலையும், விவசாய கூலித்தொழிலாளர்கள் வேறு வேலை தேடி அண்டை மாவட்டங்களுக்கும் மாநிலங்களுக்கும் செல்லும் அவல நிலைமையும் ஏற்பட்டுள்ளது.

ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் வாயு எடுக்கும் திட்டம் ஆகிய திட்டங்களை அறிவித்து அதனை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கி அதன்மூலம் காவிரி டெல்டா பகுதியை பாலைவனமாக்கிட முயற்சி நடைபெற்று வருகிறது.

காவிரி டெல்டா விவசாயிகளின் இத்தகைய அவல நிலையை போக்கிடவும் காவிரி-டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திடக்கோரியும், வருகிற 28-ந்தேதி காலை முதல் இரவு வரை, தஞ்சாவூர் மகாராஜா திருமண மண்டபத்தில் காவிரி டெல்டா விவசாயிகள் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

இந்த கருத்தரங்கில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நிறைவு உரை ஆற்றுகிறார். இதில் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்குகிறார்.

தஞ்சை எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் எம்.பி., திருவிடைமருதூர் செ.இராமலிங்கம் எம்.பி., தி.மு.க. விவசாய அணிச் செயலாளர்கள் கே.பி. இராமலிங்கம், கரூர் ம.சின்னசாமி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். தமிழகத்தில் உள்ள பல்வேறு விவசாய சங்கங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com