

வேலூர்:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டம் காரணமாக வேலூர் மாவட்டத்திலும் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
ஆம்பூர் ரெயில் நிலையம் எதிரே தேசிய நெடுஞ்சாலையில் ஆம்பூரை சேர்ந்த தி.மு.க. பெண் தொண்டர் தெய்வநாயகி என்பவர் தனி ஒரு ஆளாக கையில் தி.மு.க. கொடியை ஏந்தி சாலையின் மையப்பகுதி வந்து வேலூரில் இருந்து திருப்பத்தூர் நோக்கி வேகமாக சென்ற அரசு பஸ்சை மறித்தார்.
பஸ்சை இயக்க கூடாது என்று கூறி டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பஸ்சில் இருந்து பயணிகளை கீழே இறக்கிவிட்டு ‘நீயும் கீழே இறங்கிவா’ என்று டிரைவரை எச்சரித்தார். மேலும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக்கோரி கோஷம் எழுப்பினார்.
இதைப்பார்த்த, போலீசார் அங்கு சென்று தெய்வநாயகியிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பிறகு தெய்வநாயகி சாலையில் இருந்து விலகி, பஸ்சுக்கு வழி விட்டார். தனி ஒருவராக போராட்டம் நடத்திய தி.மு.க. பெண் தொண்டரின் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இத்தகவலையறிந்த, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அந்த பெண் தொண்டரை நேரில் சந்தித்து பாராட்டுவதற்காக அவரை சென்னைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இன்று காலை மு.க.ஸ்டாலினை சந்திக்க பெண் தொண்டர் தெய்வநாயகி சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.
அவரை, ஆம்பூர் நகர செயலாளர் ஆறுமுகம் அழைத்து சென்றுள்ளார். #Tamilnews