

சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்களுக்கு இடஒதுக்கீட்டை அதிகரித்துள்ள தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவின் சமூகநீதிப் பயணம் பாராட்டத்தக்கது. அதேநேரத்தில், ‘‘இட ஒதுக்கீட்டை மாநிலங்களே முடிவு செய்துகொள்ளும் அதிகாரம் கொடுக்கப்பட வேண்டும்”, என்று அவர் டெல்லி ஜந்தர்மந்தரில் நடத்தவிருக்கும் பேரணி குறித்து, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வரவேற்பும், மகிழ்ச்சியும் கலந்த உடன்பாடு மிக்குண்டு.
‘இடஒதுக்கீடு சதவீதத்தை நிர்ணயம் செய்து, வழங்கும் அதிகாரத்தை மாநில அரசுகளிடம் முழுமையாக வழங்க வேண்டும்’, என்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் நீண்டநாள் கோரிக்கையை தெலுங்கானா சந்திரசேகர் ராவ் முன்னெடுத்துச் செல்வது, தமிழகத்தின் உரிமைக்குரல் அண்டை மாநிலங்களிலும் எதிரொலிக்கத் தொடங்கியிருப்பதற்கு சாட்சியாக விளங்குகிறது.
ஆகவே, இடஒதுக்கீடு அதிகாரத்தை மாநிலங்களுக்கே வழங்க வேண்டும் என்றும், அதில் மத்திய அரசு எவ்வித கட்டுப்பாடுகளையும் விதிக்கக் கூடாது என்பதிலும் திராவிட முன்னேற்றக் கழகம் மிக உறுதியாக இருக்கிறது. அதுமட்டுமின்றி, மத்திய அரசு பணிகளில் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் 27 சதவீத இடஒதுக்கீடு சிதைந்து விடாமல், முழுமையாகக் கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும், மண்டல கமிஷன் பரிந்துரைப்படி மத்திய அரசு பணிகளிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு முன்வர வேண்டும் என்றும் சமூகநீதிக் கொள்கையை உயிர் மூச்சாகக் கொண்டிருக்கும் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த தருணத்தில் இடஒதுக்கீடு செய்யும் அதிகாரத்தை மாநிலங்களுக்கே கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் டெல்லி ஜந்தர்மந்தரில் நடத்தவிருக்கும் பேரணிக்கு, தலைவர் கலைஞர் அவர்களின் சார்பில் ஆதரவு தெரிவித்து, அந்தப் பேரணி குறிப்பிடத்தக்க வெற்றியினைப் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.