சர்க்கரை விலை உயர்வுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

ரேசன் கடைகளில் சர்க்கரை விலையை 13 ரூபாய் 50 பைசாவிலிருந்து, 25 ரூபாயாக உயர்த்தியதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சர்க்கரை விலை உயர்வுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்
Published on

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ரேசன் கடைகளில் சர்க்கரை விலையை 13 ரூபாய் 50 பைசாவிலிருந்து, 25 ரூபாயாக உயர்த்திய ‘குதிரை பேர’ அரசுக்கு தி.மு.க.வின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தால் பொது விநியோகத் திட்டத்துக்கு ஏற்படும் மோசமான பாதிப்பு பற்றி கவலைப்படாமல், கையெழுத்துப் போட்ட ‘குதிரை பேர’ அரசின் கையாலாகாதத்தனத்தால் இன்றைக்கு ரேசன் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரை விலை விண்ணளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு கிலோ சர்க்கரையை 25 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய அவலநிலைக்கு தமிழக மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

சர்க்கரை மானியம் உள்ளிட்ட அனைத்து மானியங்களும் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் கையெழுத்துப் போட்டதால் பாதிக்கப்படும் என்று தி.மு.க.வின் சார்பிலும், பல்வேறு கட்சிகளின் சார்பிலும் எச்சரிக்கை செய்த போது, “ரேசன் கடைகளில் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் இன்றைய விலைக்கே கொடுக்கப்படும்.

பொது விநியோகத் திட்டம் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது”, என்று ‘குதிரை பேர’ அரசு கூக்குரலிட்டதே தவிர, மத்திய நிதிநிலை அறிக்கையில் சர்க்கரை மானியத்திற்கான ஒதுக்கீடு குறைக்கப்பட்டபோது கூட இந்த அரசின் அமைச்சர்களோ, முதல்-அமைச்சரோ குரல் எழுப்பாமால் மத்திய பா.ஜ.க. அரசிடம் மண்டியிட்டு பதவியில் அமர்ந்திருப்பதை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா முதலில் கடுமையாக எதிர்த்தார். ஆனால், அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில், ரகசியமாக இந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தவர் அன்று முதல்- அமைச்சர் பொறுப்புகளை கவனித்து வந்த இன்றைய துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். அதன் பிறகு பதவிக்கு வந்த இன்றைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், மானியங்கள் இந்தச் சட்டத்தால் பறிபோவதுப் பற்றி கவலைப்படவில்லை.


தங்கள் மீதுள்ள வருமான வரித்துறை வழக்குகளில் இருந்து தப்பிக்க மாநில உரிமைகள், மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய மானியங்கள் போன்றவற்றை வரிசையில் நின்று மத்திய பா.ஜ.க. அரசிடம் சரண்டர் செய்வதற்கு சம்மதிக்கும் ‘குதிரை பேர’ அரசின் அமைச்சர்கள், பொது விநியோகத் திட்டம் பற்றி துளியும் கவலைப்படவில்லை என்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

ஏற்றுக்கொள்ள இயலாத கெடுபிடிகளை, நிபந்தனைகளை விதித்து, பொது விநியோகத் திட்டத்தையே ஒருநேரத்தில் ரத்து செய்து விடுவார்களோ என்ற அச்சம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. கழக ஆட்சியில் உச்சநீதிமன்றமே பாராட்டும் வகையில் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்ட பொது விநியோகத் திட்டம், இன்றைக்கு ‘குதிரை பேர’ அ.தி.மு.க. ஆட்சியில் சீர்குலைந்து நிற்கிறது. ‘பருப்பு டெண்டர் ஊழல்’, ‘ஸ்மார்ட் கார்டு டெண்டர் ஊழல்’ என்று சிரிப்பாய் சிரிக்கும் இந்த அரசின் நிர்வாக அலங்கோலம் இன்னும் எத்தனை மாநில உரிமைகளையும், நலன்களையும், நிதி ஆதாரத்தையும், கழக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட சிறப்பான திட்டங்களையும் காவு கொடுக்கப் போகிறதோ என்ற வேதனை தமிழக மக்கள் ஒவ்வொருவரின் இதயத்திலும் எரிமலை போல் குமுறிக் கொண்டிருக்கிறது.

ஆகவே, உறுதியளித்தபடி ‘குதிரை பேர’ அரசு ரேசன் கடைகளில் ஒரு கிலோ சர்க்கரை 13 ரூபாய் 50 பைசாவுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் அதேநேரத்தில், ஏழைகள்- நடுத்தர மக்கள் போன்றோரின் வயிற்றில் அடிக்கும் விதத்தில் இதுபோன்று சர்க்கரை மானியத்தை ரத்து செய்வதை கைவிட்டு, தமிழக அரசுக்கு தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்திலிருந்து சிறப்பு நேர்வாக விலக்கு அளித்து, சர்க்கரை மானியத்தை தொடர்ந்து வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com