நீட் தேர்வுக்கு எதிராக 13-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் அனைத்து எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

நீட் தேர்வுக்கு எதிராக அடுத்தகட்ட போராட்டமாக, 13-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் அனைத்துக் எதிர்க்கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
நீட் தேர்வுக்கு எதிராக 13-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் அனைத்து எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
Published on

நீட் தேர்வுக்கு எதிராக திருச்சியில் நடைபெற்ற எதிர்க்கட்சி பொதுக்கூட்டத்தில் தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:

நீட் தேர்வுக்கு எதிராக பொதுக்கூட்டம் நடத்தக்கூடாது என்ற செய்தி வந்ததும் அனைவரும் கலந்து பேசினோம். அப்போது, திருச்சி மாநகர கமிஷனர் எங்களை சந்தித்து ஒரு ஆணையை கொடுத்தார். நீட்டுக்கு எதிராக எந்தவித ஆர்ப்பாட்டமும் பொதுக்கூட்டமும் நடத்தினால் நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளதால், பொதுக்கூட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று அதில் இருந்தது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து டெல்லி மற்றும் சென்னையில் இருந்து நமது வழக்கறிஞர்கள் விசாரித்து உண்மை நிலையை விளக்கி சொன்னார்கள். இந்த பொதுக்கூட்டத்தை பொருத்தவரை உச்ச நீதிமன்றம் தடை போடவில்லை. இங்கு இருக்கும் காவல்துறைதான் அதற்கு காரணம். இங்குள்ள பா.ஜ.க. தலைவர்கள் ஒரு புகார் கொடுத்து, திட்டமிட்டு செய்த வேலை. இந்த சதி வலைகளை சுக்கு நூறாக்கிவிட்டு இந்த கண்டனப் பொதுக்கூட்டத்தை மாபெரும் பொதுக்கூட்டமாக நடத்திக் கொண்டிருக்கிறோம்.

அனிதாவின் மரணத்திற்கு மத்திய, மாநில அரசுகள்தான் காரணம். அவருக்கு உரிய கல்வியை இந்த அரசு மறுத்ததன் காரணமாக அவரது உயிர் பறிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மருத்துவ தலைநகரமாக சென்னை விளங்குகிறது. ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியை மிஞ்சக்கூடிய அளவுக்கு இந்தியாவின் எந்த மாநிலத்திலும் கல்வி நிலையங்கள் இல்லை.

எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் நாளை இங்கே பொதுக்கூட்டம் நடைபெறும் என்று பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை அறிவித்திருக்கிறார். கூட்டம் நடத்தட்டும். ஆனால், நீட் தொடர்பான மசோதாக்கள் என்ன ஆனது? நீட்டுக்கு ஓராண்டு விலக்கு அளிக்கப்படும் என்று கூறிய உறுதி மொழி என்ன ஆனது? கருப்பு பணத்தை மீட்டு மக்களின் வங்கி கணக்குகளில் போடுவதாக கூறிய வாக்குறுதி என்ன ஆனது? என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு அவர்கள் தைரியம் இருந்தால் பதில் சொல்லட்டும்.

இந்த பொதுக்கூட்டத்தைத் தொடர்ந்து, 2-வது கட்ட போராட்டமாக வருகிற 13-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் அனைத்து எதிர்க்கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த முடிவு செய்து இருக்கிறோம். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் முழு விவரம் கிடைத்தபிறகு அதுகுறித்து அனைத்துக்கட்சி தலைவர்களுடன் கலந்து பேசி, அடுத்தகட்டமாக, மத்திய-மாநில அரசுகளின் கவனத்தை திசை திருப்பக்கூடிய வகையில் போராட்டம் அமையும். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

இந்த பிரச்சனைக்கெல்லாம் முழுமையாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் தமிழகத்தில் நடைபெறும் குதிரைபேர அரசை நீக்கவேண்டும். அதற்கான பணிகள் முழுமையாக நடந்துகொண்டிருக்கிறது. நாளை மறுநாள் ஆளுநரை சந்திக்க உள்ளோம். அப்போது, எங்கள் கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இறுதியாக வலியுறுத்த உள்ளோம். அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இந்த ஆட்சி கவிழும் வரையில் தொடர்ந்து போராட்டம் நடைபெறும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com