அதிக கட்டணம் வசூலித்த 14 ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்

அதிக கட்டணம் வசூலித்த 14 ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
அதிக கட்டணம் வசூலித்த 14 ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்
Published on

சென்னை:

தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து இதுவரை 5 லட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.

இதற்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஏராளமான சிறப்பு பஸ்கள் விடப்பட்டுள்ளன.

பொதுமக்களின் வசதிக்காக பஸ் நிலையங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு அதிகாரிகள் உதவி செய்து வருகின்றனர். ஆனாலும் கோயம்பேட்டில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது.

இந்த கூட்டத்தை பயன்படுத்தி சில ஆம்னி பஸ்களில் அதிக அளவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர், அதிக கட்டணம் வசூலிக்கும் 14 பஸ்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்.

கோயம்பேடு ஆம்னி பஸ்நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட எம்.ஆர். விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க தமிழ்நாடு முழுவதும் 33 குழுக்களும், சென்னையில் 6 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

அதிகமான கட்டணம் வசூலிக்கும் பஸ் நிறுவனங்கள் மீது புகார்கள் வந்ததால் அதிகாரிகள் ஆய்வு செய்து 14 பஸ்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஒய்.பி.எம்., ஆரஞ்சு, சோனா, எஸ்.ஆர்.எம். ஆகிய 4 நிறுவனங்கள் கூடுதலாக வசூலித்த பணத்தை அந்தந்த பயணிகளுக்கு திருப்பி கொடுத்துள்ளனர்.

இதுதவிர வேறு எந்தெந்த ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது என்பதை ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மழையின் காரணமாக நேற்று மாலை வடபழனி ரோட்டில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டதால் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலந்தூரில் மெட்ரோ ரெயிலில் ஏறி கோயம்பேடு வந்தார். சிறப்பு பஸ்களுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளையும் அவர் பார்வையிட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com