

நீட்தேர்வில் இருந்து தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு பெறுவதற்கான அவசர சட்ட வரைவுக்கு மத்திய அமைச்சகங்களின் ஒப்புதல் பெறுவதற்காக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.
சட்டத்துறை மற்றும் மனிதவள மேம்பாட்டுதுறை அமைச்சர்கத்தின் ஒப்புதல் பெறப்பட்டள்ள நிலையில் சுகாதாரத்துறை மற்றும் உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல்பெற தீவிர முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இந்த 2 அமைச்சகத்தின் ஒப்புதலும் இன்று அல்லது நாளைக்குள் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக டெல்லியில் மத்திய மந்திரிகளை சந்தித்து பேசிவரும் அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
நீட் மாணவர்களுக்கு பாதகம் ஏற்படாத வகையில் கலந்தாய்வு நடத்தப்படும். கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக தான் அரசு இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இரு பிரிவினருக்கும் பாதகம் இல்லாத நிலையை தமிழக அரசு எடுத்துள்ளது.
மத்திய அரசின் நல்ல முடிவின் காரணமாக ஒரு ஆண்டுக்கு விலக்கு கிடைத்துள்ளது. இது தமிழக அரசுக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறோம். நீட் விவகாரத்தில் கலந்தாய்வு தாமதம் என்று சொல்ல முடியாது. நடைமுறையில் ஏற்படும் பிரச்சினையாக உள்ளது.
இந்தியாவிலேயே தமிழகம் தான் மருத்துவ துறையில் முன்னோடியாக விளங்குகிறது. நீட் விவகாரத்தில் பெரும் சட்டப் போராட்டம் நடைபெற்றுள்ளது. அதனாலும் தாமதம் ஏற்படவில்லை. சட்ட சிக்கல் காரணமாக ஏற்பட்ட தாமதம் மட்டுமே. கலந்தாய்வு நடத்துவதற்கு 6 நாட்கள் போதுமானது. அதனால் 31-ந் தேதிக்குள் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்படும்.
அரசு இடங்களுக்கு மட்டும் தான் விலக்கு கேட்டுள்ளோம். தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் நீட் அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.