கட்சியை கைப்பற்ற நினைத்தவர்கள் துரோகிகள்: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேச்சு

அம்மா இருக்கும் போதே கட்சியை கைப்பற்ற நினைத்தவர்கள் தான் துரோகிகள். அவர்களை அம்மா கட்சியை விட்டு விலக்கி வைத்திருந்தார் என எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசினார்.
கட்சியை கைப்பற்ற நினைத்தவர்கள் துரோகிகள்: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேச்சு
Published on

ஊட்டியில் இன்று நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியதாவது:-

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா 29-வது மாவட்டமாக ஊட்டியில் இன்று நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டம் திரைப்படத்துறைக்கு சிறந்த மாவட்டமாக விளங்கி வருகிறது.

எம்.ஜி.ஆர். நடித்த பெரும்பாலான படங்கள் நீலகிரி மாவட்டத்தில் எடுக்கப்பட்டவைகள். எம்.ஜி.ஆர். தமிழ் மீதும், தமிழக மக்கள் மீதும் மிகுந்த அன்பு செலுத்தினார். சத்துணவு திட்டத்தை விரிவு படுத்தினார்.

மகளிருக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். எம்.ஜி.ஆர். வழியில் வந்த ஜெயலலிதா ஆட்சியில் பல்வேறு நலத்திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டது. பள்ளி மாணவர்கள் முதல் தாய்மார்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி உள்ளார்.

நீலகிரி மாவட்டத்தை தனது சொந்த மாவட்டமாக கருதி திட்டங்களை செயல்படுத்தினார். அவர் வழியில் வந்த எடப்பாடி பழனிசாமி அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.


கடந்த முறை ஊட்டி மலர் கண்காட்சி திறப்பு விழாவிற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வந்த போது ஊட்டி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஊட்டி பஸ் நிலையத்தை நவீனப்படுத்த வேண்டும் என்றார்.

பின்னர் பேசிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஊட்டி பஸ் நிலையத்தை நவீனப்படுத்த ரூ. 2 கோடி நிதி ஒதுக்கி அறிவித்தார். காங்கிரஸ் எம்.எல்.ஏ. கோரிக்கை வைத்த 10 நிமிடத்திலே முதல்-அமைச்சர் நிதி ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டார்.

இன்று இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்று உள்ளது. முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் இணைந்து கட்சியையும், ஆட்சியையும் சிறப்பாக வழி நடத்தி வருகிறார்கள்.

தற்போது சுயேச்சை ஒருவர் இவர்கள் 2 பேரையும் பார்த்து துரோகிகள் என சொல்கிறார். அம்மா இருக்கும் போதே கட்சியை கைப்பற்ற நினைத்தவர்கள் தான் துரோகிகள். அவர்களை அம்மா கட்சியை விட்டு விலக்கி வைத்திருந்தார். எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் தியாகிகள். மக்கள் இருக்கும் வரை கட்சியை யாராலும் வெல்ல முடியாது.

ஆட்சியை கவிழ்த்து விடுவோம் என மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். மு.க.ஸ்டாலின் மட்டுமல்ல எத்தனை பேர் வந்தாலும் ஆட்சியை கவிழ்க்க முடியாது.

ஜெயலலிதா கூறியது போல் நூற்றாண்டு காலம் ஆனாலும் அ.தி.மு.க.வை அழிக்க முடியாது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com