சதிகார கூட்டத்தின் பிடியில் சிக்கியதால் ஜெயலலிதாவை இழந்துவிட்டோம்- அமைச்சர் சண்முகம்

சதிகார கூட்டத்தின் பிடியில் சிக்கியதால் ஜெயலலிதாவை இழந்துவிட்டோம் என்று திருக்கோவிலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார். #Jayalalithaa
கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியபோது எடுத்த படம். அருகில் குமரகுரு எம்.எல்.ஏ. மற்றும் பலர் உள்ளனர்.
கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியபோது எடுத்த படம். அருகில் குமரகுரு எம்.எல்.ஏ. மற்றும் பலர் உள்ளனர்.
Published on

முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாளையொட்டி ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திருக்கோவிலூர் செவலை ரோட்டில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழக சட்டம், நீதிமன்றங்கள்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.

தற்போது நடைபெறும் 70-வது பிறந்த நாள் விழாவை முழுமனதோடு கொண்டாட முடியவில்லை. காரணம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நம்மிடம் இல்லை. இருந்தாலும் அவரது எண்ணப்படி தனது பிறந்த நாளில் ஏழைகளுக்கு நலத்திட்டங்கள் உதவிட வேண்டும் என்பதை உறுதி செய்யும் வகையில் நடத்தி வருகின்றோம். 32 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழகத்தில் தொடர்ந்து ஆட்சி செய்யும் பொறுப்பை தமிழக மக்கள் ஜெயலலிதாவிடம் ஒப்படைத்தனர்.


ஆனால் ஆட்சி செய்து மக்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருந்த ஜெயலலிதாவை ஒரு சதிகார கூட்டம் சாகடித்து விட்டது. அந்த கூட்டத்தின் பிடியில் சிக்கியதால்தான் நாம் ஜெயலலிதாவை இழந்து நிற்கின்றோம். உடல் நலம் சரியில்லை என்று ஆஸ்பத்திரிக்கு போன ஜெயலலிதாவை கவர்னர் உள்ளிட்ட எவருமே பார்க்க முடியவில்லையே.

அன்றைய தினம் முதல்வர் பொறுப்பு வகித்த ஓ.பன்னீர் செல்வமும் பார்க்க முடியவில்லை. முடிவு சதிகார கூட்டத்தில் சிக்கிய ஜெயலலிதா நம்மை விட்டு சென்றுவிட்டார். அந்த கூட்டத்தில் வந்த ஒருவர் பேசுகின்றார். நான்தான் உண்மையான அ.தி.மு.க. என்று. யாரையெல்லாம் ஜெயலலிதா ஒதுக்கி வைத்தாரோ? அந்த கூட்டம்தான் ஜெயலலிதாவின் இறப்பின் போது சுற்றி நின்றிருந்தனர்.

அமைச்சர்களை கூட ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்காத அந்த கூட்டத்திற்கு மக்கள் தண்டனை தருவார்கள். இரட்டை இலையை முடக்க சொன்ன தினகரனுக்கும் அ.தி.மு.க.வுக்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை. 1½ கோடி தொண்டர்கள் நிறைந்த அ.தி.மு.க. மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் எண்ணப்படி இன்னும் 100 ஆண்டுகள் தமிழகத்தை ஆளும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கு பொதுமக்கள் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com