நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு தகுதியற்றவர்- கடம்பூர் ராஜு பேட்டி

நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு தகுதியற்றவர் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார். #ministerkadamburraju #kamal #political
நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு தகுதியற்றவர்- கடம்பூர் ராஜு பேட்டி
Published on

கோவில்பட்டி:

சட்டப்பேரவை மேம்பாட்டு திட்ட நிதியின் கீழ் கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 3, 22, 24 ஆகிய பகுதிகளில் ஆழ்துளை கிணற்றுடன் கூடிய மின் மோட்டார் அறை மற்றும் சின்டெக்ஸ் குடிநீர் அமைப்பதற்காக ரூ 7.70 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று முடிவடைந்தது. இந்த குடிநீர் திட்டப்பணியை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜு நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்வராக வேண்டும் என்ற கனவிலும், ஏக்கத்திலும் மு.க.ஸ்டாலின் இருந்து வருகிறார். ஆளுகின்ற பொறுப்பினை அ.தி.மு.க.விற்கும், எதிர்கட்சி பொறுப்பினை தி.மு.க.விற்கும் மக்கள் கொடுத்துள்ளனர். ஆளும் கட்சியாக நாங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். ஆளும் கட்சி, எதிர் கட்சி இரண்டும் நாணயத்தின் இருபக்கம் போன்று செயல்பட வேண்டும், எதிர்கட்சி தலைவர் சிறந்த ஆலோசகராகவும் செயல்பட வேண்டும். ஆனால் திமுக எதிர்கட்சியாக செயல்படாமல், மக்களின் தீர்ப்பினை மதிக்காமல் செயல்பட்டு வருகிறது. தற்போது தேர்தல் வர வாய்ப்பு இல்லை. 

வருகிற 2021-ம் ஆண்டில் தேர்தல் வரும். அப்போது மீண்டும் அ.தி.மு.க தான் ஆட்சியை பிடிக்கும். திமுக இதே நிலையில் நீடித்தால் தேர்தலில் எதிர்கட்சி அந்தஸ்தினை கூட பெறமுடியாது. மு.க.ஸ்டாலின் முதல்வர் கனவு வெறும் கனவாக மட்டுமே இருக்கும். சமீபத்தில் சென்னையில் 3 நாட்கள் நடைபெற்ற மாவட்ட கலெக்டர் மற்றும் காவல்துறை மாநாட்டிற்கு பின்பு 84 திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு 5 திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க மற்றும் இரட்டை இலைச்சின்னம் எங்களுக்கு தான் என்றும், அதனை யாரும் தார்மீக உரிமை கொண்டாட முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து விட்டது. வேறு வழியில்லாமல் தினகரன் அணியினர் தனி அமைப்பு மற்றும் சின்னத்தினை பெற்றுள்ளனர். இந்நிலையில் இரட்டை இலையை மீட்போம் என்று கூறுவது அவர்களுக்கு அரசியல் தெரியாது என்று தான் அர்த்தம்.

தமிழகத்தில் தற்போது நடைபெறுவது எம்.ஜி.ஆர் ஆட்சிதான். கடந்த தேர்தலின் போது ஜெயலலிதா இதை வலியுறுத்தி தான் வாக்கு சேகரித்தார். ரஜினி உள்ளிட்ட சிலர் எம்.ஜி.ஆர் பெயரை பயன்படுத்தி லாபம் அடைய முயற்சிக்கின்றனர். தமிழகத்தில் எம்.ஜி.ஆர் பற்றி பேசுவதற்கு மற்றவர்களுக்கு உரிமையில்லை. மக்களாட்சியை கொண்டு வருவோம் என பேசியுள்ள நடிகர் கமல்ஹாசன், இன்னும் சினிமா என்னும் கனவுலகத்தில்தான் இருக்கிறார். 

தமிழகத்தில் மக்களாட்சிதான் நடக்கிறது. அந்த காலத்தை போல் மன்னராட்சியா நடக்கிறது. எனவே மக்கள் ஆட்சிதான் தமிழகத்தில் நடக்கிறது என்பது கூட தெரியாத நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு தகுதிய‌ற்றவர்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews #ministerkadamburraju #kamal #political

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com