

சென்னை:
சென்னை நொச்சிக்குப்பத்தில் சுனாமியில் உயிரிழந்தவர்களின் படங்களுக்கு இன்று அமைச்சர் ஜெயக்குமார் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வாழ்க்கை என்பது ஒரு போராட்டம். அதுவும் போர் தான். அரசியல் களமும் ஒரு போர்தான். அதில் எங்களுடைய இலக்கு வெற்றி பெற வேண்டும் என்பதுதான்.
ரஜினியின் அரசியல் பிரவேசத்தை பா.ஜனதா முழுமையாக பயன்படுத்தி கொள்ளுமா என்கிற அனுமானத்துக்கெல்லாம் நான் பதில் சொல்ல தயாராக இல்லை.
ஒரு செங்கலை கூட அ.தி.மு.க. எக்கு கோட்டையில் இருந்து யாரும் உருவ முடியாது. ஆர்.கே.நகர் வெற்றி என்பது கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட வெற்றி.
தி.மு.க. செயல் தலைவராக இருந்து முதல் தேர்தலை சந்தித்த மு.க.ஸ்டாலினுக்கு மிகப்பெரிய படுதோல்வி. அதாவது எனக்கு ஒரு கண் போனால் எதிரிக்கு 2 கண்ணும் போக வேண்டும் என்பார்கள். வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது போல தினகரனுக்கு தி.மு.க. ஆதரவு என்று அவர் எடுத்த அந்த முடிவு இன்று அவரது கட்சிக்குள்ளேயே பெரும் பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் குற்றச்சாட்டை அம்மா உலகுக்கே அடையாளம் காட்டினார். கனிமொழியும், ராசாவும் விடுதலை செய்யப்பட்ட போது அவர்களுக்கு தினகரன் வாழ்த்து கூறினார் என்றால் அ.தி.மு.க.வை கேவலப்படுத்தும் செயலாக தினகரன் செயல் உள்ளது. இதில் தி.மு.க.வுடன் அவர் கூட்டு சேர்ந்தது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. இருவரும் கூட்டு சேர்ந்து செய்த சதி காரணமாக தற்காலிக பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே திருமங்கலம் பார்முலாவை அறிமுகப்படுத்தியது தி.மு.க. ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி மக்களை பிச்சைக்காரர்களாக நினைத்து அவர்களுக்கு காசு கொடுத்தால் ஓட்டு போடுவார்கள் என்ற எண்ணத்தை திருமங்கலத்தில் உருவாக்கி ஜனநாயகத்தை சீரழித்தது தி.மு.க.
திருமங்கலம் ஒரு பார்முலா என்றால் அதை விட ஜனநாயகத்துக்கு நச்சுத்தன்மையாக நயவஞ்சக தன்மையாக ஜனநாயகமே இன்று படுகுழியில் தள்ளப்படுகின்ற நிலைமை இருக்கிறது.
ஹவாலா பாணியில் 20 ரூபாய் நோட்டில் ஓட்டை கணக்கெடுத்து பணம் கொடுக்கிறார்கள் என்று சொன்னால் இன்றைக்கு ஒரு புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது மிகவும் வேதனைக்குரிய செயலாக இருக்கிறது.
வருகிற காலகட்டத்தில் தேர்தல்களை பணத்தை கொடுத்து வாக்காளர்களை ஏமாற்றும் செயலில் ஈடுபடுகிறவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து அவர்கள் வாழ்நாளிலேயே தேர்தலில் போட்டியிட முடியாதபடி ஒரு சட்டத்தை கொண்டு வருவது தேர்தல் ஆணையத்தின் கடமையாக இருக்க வேண்டும்.
இனி இந்தியாவிலேயே பில்லா, ரங்கா போல கடத்தல்காரர்கள்தான் சட்டமன்ற தேர்தலில் நிற்க முடியும். மக்களால் நிற்க முடியாமல் போய்விடும். எனவே பில்லா, ரங்கா போன்றவர்களை வரவிடாமல் தேர்தல் ஆணையம் விழிப்போடு இருந்து கடுமையான திருத்தங்களை கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். அதுதான் மக்களின் எண்ணம்.
இவ்வாறு அவர் கூறினார்.