

கோவில்களில் பக்தர்களுக்கு இலவச பிரசாதம் வழங்கும் நடைமுறை தமிழகத்தில் தற்போது தொடங்கி உள்ளது. முதல் கட்டமாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு இலவச லட்டு பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து தற்போது திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் செவ்வாய்க்கிழமைதோறும் பக்தர்களுக்கு சர்க்கரை கலந்த இலவச பால் பிரசாதம் வழங்கப்படுகிறது.
இதனை செவ்வாய்க்கிழமைதோறும் காலை 6 மணி முதல் இரவு வரை சர்க்கரை கலந்து காய்ச்சிய பால் வழங்க கோவில் நிர்வாகம் திட்டமிட்டது. அதன்படி இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அனுமதியின் பேரில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் பக்தர்களுக்கு சர்க்கரை கலந்த காய்ச்சிய பால் வினியோகம் செய்யப்பட்டது. அதை பெற்றுக்கொண்ட பக்தர்கள் பயபக்தியுடன் முருகனை வழிபட்டனர்.
சர்க்கரை பால் பிரசாதம் வினியோகம் குறித்து கோவில் அதிகாரிகள் கூறுகையில், திருப்பரங்குன்றம் கோவிலில் செவ்வாய்க்கிழமைதோறும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தும் வகையில் முருகனுக்கு பாலாபிஷேகம் செய்கிறார்கள்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்த பால் கொண்டு வருகிறார்கள். அந்த அபிஷேக பாலை காய்ச்சி பக்தர்களுக்கு வழங்குகிறோம். தேவைப்படும் பட்சத்தில் உபயதாரர்கள் மூலமாகவும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனர்.