

ஐதராபாத்:
உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
கொரோனா பாதிப்பு எதிரொலியாக அனைத்து மாநிலங்களிலும் முதல் மந்திரி நிவாரண நிதி பெறப்பட்டு வருகிறது. இந்த நிதிக்கு பல்வேறுதரப்பினர் தங்களால் முடிந்தளவு நிதி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், மைக்ரோசாப்ட் சிஇஓ மனைவி அனுபமா சார்பில், கொரோனா பாதிப்பு நிதியாக தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவிடம் 2 கோடி ரூபாய்க்கான காசோலை இன்று வழங்கப்பட்டது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓவாக இருந்து வருபவர் சத்ய நாதெள்ளா. இவரது மனைவி அனுபமா வேணுகோபால் நாதெள்ளா. தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவை அனுபமாவின் தந்தை வேணுகோபால் இன்று சந்தித்தார். அப்போது கொரோனா பாதிப்பு நிதியாக 2 கோடி ரூபாய்க்கான அனுபமா சார்பில் காசோலையை வழங்கினார்.
மேலும், தெலுங்கானா மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் தங்களது ஒருநாள் சம்பளமான 48 கோடி ரூபாயை முதல் மந்திரி நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர்.