மேட்டுப்பாளையம் அருகே காட்டு யானை தாக்கி முதியவர் படுகாயம்

மேட்டுப்பாளையம் அருகே காட்டு யானை ஒன்று முதியவரை தாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களை பீதியடைய வைத்துள்ளது.
மேட்டுப்பாளையம் அருகே காட்டு யானை தாக்கி முதியவர் படுகாயம்
Published on

மேட்டுப்பாளையம்:

கோவை வனக் கோட்டம் மேட்டுப்பாளையம் வனச் சரகத்திற்கு உட்பட்ட அடர்ந்த வனபகுதியில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக நடமாடி வருகின்றன .

காட்டு யானைகள் இரவு நேரத்தில் வனப்பகுதியையொட்டி கிராமங்களில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன.

குறிப்பாக மேட்டுப்பாளையம் வனபத்ர காளியம்மன் கோவில் ரோட்டில் உள்ள சமயபுரம் பகுதி வனவிலங்குகள் கடந்து செல்லும் பகுதியாக விளங்கி வருகிறது .

இந்த நிலையில் இன்று அதிகாலை காட்டு யானை ஒன்று முதியவரை தாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களை பீதியடைய வைத்துள்ளது.

மேட்டுப்பாளையத்தை அடுத்த சமயபுரம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 75).

இவர் இன்று காலை 6.30 மணிக்கு அப்பகுதியில் ரோட்டோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். . அப்போது திடீரென எதிர் பாராத விதமாக அடர்ந்த புதருக்குள் மறைந்திருந்த காட்டு யானை ஒன்று அவரை தாக்கியது . இதில் காளியப்பன் படுகாயம் அடைந்தார்.

அதன் பின்னர் யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் செல்லாமல் அங்கேயே சுற்றி திரிந்தது.

இது குறித்து மேட்டுப்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது.உடனே மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் செல்வராஜ், வனவர் ரவி, வனக்காப்பாளர் நித்தியானந்தம், வனக் காவலர் மோகன்ராஜ் மற்றும் வேட்டை தடுப்புக் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர் .

உயிருக்கு போராடி கொண்டிருந்த காளியப்பனை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் . அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர் .

இதனை தொடர்ந்து சமயபுரம் பகுதியில் புதருக்குள் நின்று கொண்டிருந்த காட்டு யானையை விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர் . பட்டாசு வெடித்து வனத்துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி அந்த காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர் .

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com