போக்குவரத்து நெரிசலை தீர்க்க கோவையில் மெட்ரோ ரெயில்

போக்குவரத்து நெரிசலை தீர்க்க கோவையில் மெட்ரோ ரெயில் அமையும் பாதைகள், முக்கிய இடங்களில் அமைக்கப்பட வேண்டிய பாதைகள் என பல்வேறு நிலைகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
போக்குவரத்து நெரிசலை தீர்க்க கோவையில் மெட்ரோ ரெயில்
Published on

கோவை:

சென்னையை தொடர்ந்து கோவையில் போக்குவரத்து நெரிசலை தீர்க்கும் வகையில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூலை மாதம் சட்டசபையில் அறிவித்தார்.

ஜெர்மன் நாட்டு நிதி நிறுவனமான கே.எப்.டபிள்யூ.விடம் நிதிஉதவி பெற்று இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக விரிவான சாத்தியக்கூறு மற்றும் திட்ட அறிக்கையை தயாரிக்கும் பணியை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மேற்கொள்கிறது.

முதற்கட்டமாக ஒரு ஆலோசகரை நியமித்து மெட்ரோ ரெயில் திட்டத்துக்கான நடைமுறை சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க உள்ளனர்.

கோவையில் மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னை தலைமை செயலகத்தில் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.

சிறப்பு திட்டங்கள் மற்றம் மேம்பாட்டுத்துறை சார்பில் நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகளும் மெட்ரோ ரெயில் திட்டம் குறித்த கருத்துகளை தெரிவித்தனர். தற்போது கோவையில் நடைமுறை போக்குவரத்து முறைகள் மற்றும் மெட்ரோ ரெயில் அமைக்கும் போது அவினாசி சாலையுடன் இணைக்கப்பட வேண்டிய பகுதிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேட்டுப்பாளையம் சாலை, அவினாசி சாலை, சக்தி சாலை, திருச்சி சாலை ஆகிய 4 சாலைகளையும் மெட்ரோ ரெயில் பாதையுடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. காரணாம்பேட்டை முதல் தண்ணீர்பந்தல் வரை, கணேசபுரம் முதல் காருண்யாநகர் வரை, கணியூர் முதல் உக்கடம் பஸ் நிலையம் வரை, பிளிச்சி முதல் உக்கடம் பஸ் நிலையம் வரை என 4 வழித் தடங்களில் 136 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் திட்டத்தை அமைப்பதற்கான வழிமுறைகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

இத்திட்டம் தொடர்பாக பல்வேறு தொழில்நுட்ப வல்லுநர்களின் ஆலோசனைகளையும் பரிசீலித்து வருகின்றனர்.

மேலும் திட்டத்துக்கு தேவைப்படும் நிதி, மெட்ரோ ரெயில் அமையும் பாதைகள், முக்கிய இடங்களில் அமைக்கப்பட வேண்டிய பாதைகள் என பல்வேறு நிலைகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த பணிகள் அனைத்தும் இன்னும் 10 மாதத்துக்குள் முடிவடைந்து விரிவான திட்ட அறிக்கை அரசிடம் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவையில் அமைக்கப்படும் மெட்ரோ ரெயில் திட்டத்தில் 3 வழித்தடங்களை காந்திபுரத்துடன் இணைக்க வேண்டும் என தொழில்துறை வல்லுநர்கள் வலியுறுத்தி உள்ளனர். காந்திபுரத்தில் அதி விரைவு பஸ் நிலையம், மத்திய பஸ் நிலையம், டவுன் பஸ் நிலையம் என 3 பஸ் நிலையங்கள் உள்ளன. மெட்ரோ ரெயில் வழித்தடங்களை இணைத்து பாதைகளை உருவாக்கினால் இங்கு போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் என தொழிற்துறை வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com