

ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள பொது வேட்பாளர் மீராகுமார் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அரசியல் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
நேற்று அவர் பீகார் மாநிலம் சென்றார். இன்று அவர் பல்வேறு கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவரும் முதல்-மந்திரியுமான நிதிஷ் குமார் பா.ஜனதா வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மீரா குமார் வருகையின் போது அவரை சந்திக்க வேண்டி வரும் என்பதால் அதை தவிர்ப்பதற்காக நிதிஷ்குமார் நேற்று திடீர் என்று தனது சொந்த மாவட்டமான ராஜ்கிர் சென்று விட்டார். இது பாட்னாவில் இருந்து 100 கி.மீ தொலைவில் உள்ளது. மீரா குமார் பீகாரை விட்டு சென்ற பின்பு தான் நிதிஷ் குமார் பாட்னா திரும்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்த குற்றச்சாட்டை நிதிஷ்குமார் மறுத்தார். தனது சுற்றுப் பணத்தில் உள் நோக்கம் எதுவும் இல்லை என்று கூறினார். ராஜ்கிர் சுற்றுலா நகரம் ஆகும். இங்கு நிதிஷ்குமார் 2 நாட்கள் தங்கி இருப்பார் என்று அவரது அலுவலக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
மீராகுமார் ராஷ்டிரிய ஜனதாதளம் தலைவர் லல்லு பிரசாத் யாதவ் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் எம்.பி.க்கள் எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.
இதற்கிடையே பா.ஜனதா சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ராம்நாத் கோவிந்த் தேர்தலுக்கு முதல் நாளான வருகிற 16-ந்தேதி தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களை சந்திக்கிறார்.
இதில் பிரதமர் மோடி, பா.ஜனதா தலைவர் அமித் ஷா மற்றும் பா.ஜனதாவை ஆதரிக்கும் எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
எம்.பி.க்களுடன் ராம்நாத் கோவிந்த் கலந்துரையாடுகிறார். தொடர்ந்து ஜனாதிபதி தேர்தலில் ஓட்டளிப்பது பற்றி செயல் விளக்கமும் செய்து காண்பிக்கப்படுகிறது. எனவே இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அனைத்து எம்.பி.க்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது.
எம்.பி.க்கள் மாநில தலைநகரங்களிலும் வாக்களிக்கலாம். ஆனால் பா.ஜனதா அனைத்து எம்.பி.க்களையும் டெல்லிக்கு வரவழைத்து டெல்லியிலே வாக்களிக்க ஏற்பாடு செய்துள்ளது.
பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் மொத்தம் உள்ள 776 எம்.பி.க்களில் 550 எம்.பிக்கள் ஆதரவு கிடைக்கும் என்று பா.ஜனதா தேர்தல் பொறுப்பாளர்கள் தெரிவித்தனர். 776 எம்.பி.க்களின் ஓட்டு எண்ணிக்கை 5.55 லட்சம் ஆகும். இதில் 4 லட்சம் ஓட்டுகள் தங்களுக்கு கிடைக்கும் என்றும், மாநில எம்.எல்.ஏக்களின் ஓட்டு எண்ணிக்கையான 5.49 லட்சத்தில் 3.5 லட்சம் ஓட்டுகள் கிடைக்கும் என்றும் மேலும் தெரிவித்தனர்.