

ஷில்லாங்:
மேகாலயா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி நடத்தப்படுகிறது. அங்கு எம்.எல்.ஏ.க்கள் சம்பளம் ரூ.2.10 லட்சமாக உள்ளது. இதில் போக்கு வரத்து அலவன்ஸ், சட்ட சபை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்கான அலவன்ஸ் மற்றும் இதர படிகள் அடங்கும்.
தற்போது மாநிலத்தில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து செலவினங்களை குறைப்பது பற்றி முதல்-மந்திரி முகுல் சங்மா மந்திரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வந்தார்.
இதில் எம்.எல்.ஏ.க்கள் சம்பளத்தை குறைப்பது, மின்சார சிக்கனம் உள்பட பல நடவடிக்கைகள் மேற் கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து மாநில மந்திரிசபை கூட்டம் கூட்டப்பட்டது. இதில் எம்.எல்.ஏ.க்கள் சம்பளத்தை குறைப்பது உள்ளிட்ட சிக்கன நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
அதன்படி எம்.எல். ஏ.க்களின் சம்பளத்தில் ரூ. 8 ஆயிரம் குறைக்கப்படுகிறது. தற்போது ரூ.2.10 லட்சமாக இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் சம்பளம் ரூ.2.02 லட்சமாக குறைந்தது.
இந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் எம்.எல். ஏ.க்கள் சம்பளமும், முதல்- மந்திரி, துணை முதல்-மந்திரி சம்பளமும் இருவிதமாக உயர்த்தப்பட்டது.