குழந்தைகள் கண்முன் மனைவியை எரித்து கொன்ற கணவர்

மேடவாக்கம் அருகே குழந்தைகள் கண் முன்பு மனைவியை, கணவனே எரித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Published on: 

பள்ளிக்கரணை:

பள்ளிக்கரணையை அடுத்த மேடவாக்கம் ராமதாஸ் தெருவில் வசித்து வருபவர் ராஜேஷ், கூலி தொழிலாளி. இவரது மனைவி சந்தியா (வயது 30). இருவரும் காதலித்து திருமணம் செய்து இருந்தனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

ராஜேசுக்கு குடிப்பழக்கம் உண்டு. அவர் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்தார். சந்தியா பள்ளிக்கரணையில் உள்ள ஜவுளிக் கடையில் வேலை பார்த்து குடும்ப செலவுகளை கவனித்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு மது குடித்துவிட்டு ராஜேஷ் வீட்டுக்கு வந்தார். இதனை சந்தியா கண்டித்தார் இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏறபட்டது. பின்னர் இருவரும் வீட்டில் தூங்கினர்.

நள்ளிரவு 2 மணி அளவில் எழுந்த ராஜேஷ் மனைவியிடம் மீண்டும் மோதலில் ஈடுபட்டார். அவரை தாக்கி கிழே தள்ளினார். இதில் பலத்த காயம் அடைந்த சந்தியா மயங்கினார்.

உடனே வீட்டில் இருந்த மண்எண்ணையை சந்தியா மீது ஊற்றி தீவைத்தார். அப்போது ராஜேசின் உடலிலும் தீப்பற்றியது. சத்தம் கேட்டு எழுந்த 2 மகன்களும் தாய் தீப்பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இருவரும் அலறியபடி வீட்டை விட்டு வெளியே ஓடினர்.

அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் சந்தியாவை மீட்க முயன்றனர். இதற்குள் அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

தீக்காயம் அடைந்த ராஜேசை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மகன்கள் கண் முன்பு மனைவியை, கணவனே எரித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com