

ஐதராபாத்:
கடந்த 2007, மே 18-ம் தேதி சார்மினாருக்கு அருகில் இருந்த மெக்கா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை நடந்து கொண்டிருந்த போது சக்திவாய்ந்த வெடிகுண்டு வீசப்பட்டது. இந்த சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 58 பேர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பின் போது வெடிக்காத 2 சக்திவாய்ந்த வெடிகுண்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதோடு மசூதிக்கு வெளியே போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டிலும் 5 பேர் உயிரிழந்தனர். இந்து அமைப்பைச் சேர்ந்த அசீமானந்த், தேவேந்திர குப்தா, லோகேஷ் ஷர்மா, பாரத்பாய், ரஜேந்தர் செயத்ரி உள்ளிட்ட 8 பேர் இந்த குண்டு வெடிப்பில் தொடர்புள்ளவர்கள் என்று என்.ஐ.ஏ குற்றம்சாட்டியது.
குற்றவாளிகளில் சுனில் ஜோஷி விசாரணையின் போதே படுகொலை செய்யப்பட்டார். சந்தீர் வி. டங்கே, மத்திய பிரதேசத்தை சேர்ந்த ராம்சந்திர கல்சங்கரா இரண்டு பேரும் விசாரணையில் இருந்து தப்பினர். ஏனைய 5 பேர் மீது ஐதராபாத்தில் உள்ள என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்ததையடுத்து, இன்று தீர்ப்பு வழங்குவதாக நீதிமன்றம் அறிவித்தது. தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி, நீதிமன்ற வளாகத்திற்கு குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் அழைத்து வரப்பட்டு இருந்தனர். நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
நண்பகல் அளவில் தீர்ப்பு அளித்த என்.ஐ.ஏ நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதுமான ஆதராங்கள் இல்லை என கூறி நீதிமன்றம் விடுதலை செய்வதாக அறிவித்தது. #tamilnews