தூதரக அதிகாரி முதல் மக்களவை சபாநாயகர் வரை - மீரா குமார் வாழ்க்கை குறிப்பு

ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள 72 வயதான மீரா குமார், தூதரக அதிகாரி முதல் மக்களவை சபாநாயகர் வரையிலான பல முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
தூதரக அதிகாரி முதல் மக்களவை சபாநாயகர் வரை - மீரா குமார் வாழ்க்கை குறிப்பு
Published on

பீகார் மாநிலம் அர்ரா மாவட்டத்தில் 1945-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதி மீரா குமார் பிறந்தார். அவர், மறைந்த முன்னாள் துணை பிரதமர் பாபு ஜெகஜீவன் ராம் மகள் ஆவார்.

அவர் ஆங்கிலத்தில் முதுகலை பட்டமும், எல்.எல்.பி. என்ற சட்டப்படிப்பும் படித்தார்.

1973-ம் ஆண்டு, இந்திய வெளியுறவு பணி (ஐ.எப்.எஸ்.) அதிகாரி ஆனார். ஸ்பெயின், இங்கிலாந்து, மொரீஷியஸ் ஆகிய நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் அதிகாரியாக பணியாற்றி உள்ளார்.

1980-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு பார் அசோசியேசனில் உறுப்பினராக பதிவு செய்து கொண்டார்.

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, மீரா குமாரை இந்திய வெளியுறவு அதிகாரி வேலையை விட்டு விட்டு, காங்கிரசில் இணையச் செய்தார். அதன்படி இணைந்த மீரா குமார், 1985-ம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் தொகுதியில் போட்டியிட்டு முதல்முறையாக எம்.பி. ஆனார். அந்த தேர்தலில், இதர தலித் தலைவர்களான மாயாவதி, ராம்விலாஸ் பஸ்வான் ஆகியோரை தோற்கடித்தார்.

பின்னர், 4 தடவை எம்.பி. ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004-ம் ஆண்டு, மத்திய மந்திரி ஆனார். 2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டுவரை பாராளுமன்ற சபாநாயகராக பணியாற்றினார்.

அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர், காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர் ஆகிய கட்சி பதவிகளை வகித்துள்ளார். 2000-ம் ஆண்டு முதல் 2002-ம் ஆண்டுவரை, காங்கிரசை விட்டு விலகி இருந்தார்.

மீரா குமாரின் கணவர் மஞ்ஜுல் குமார், சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் ஆவார். இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர்.

கர்நாடக சங்கீதத்திலும், புத்தகம் வாசிப்பதிலும் மீரா குமார் ஆர்வம் கொண்டவர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com