பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரி பிரசவ வார்டு மூடல்

பச்சிளம் குழந்தை உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரி பிரசவ வார்டு மூடப்பட்டது.
கர்ப்பிணி
கர்ப்பிணி
Published on

பொள்ளாச்சி:

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டு இருந்த ஆனைமலையை அருகே உள்ள காளியாபுரத்தை சேர்ந்த பெண்ணுக்கு கடந்த வாரம் குழந்தை பிறந்தது. இதையடுத்து அந்த பெண்ணின் சளி, ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அந்த வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்த மற்ற கர்ப்பிணிகள், அவர்களை பார்க்க வந்த உறவினர்கள், சுகாதார பணியாளர்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து சளி, ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டது. இதற்கிடையில் ஊஞ்சவேலாம்பட்டியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதேபோன்று பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் பிரசவித்த வால்பாறையை சேர்ந்த 26 வயது பெண் மற்றும் ஆத்துப்பொள்ளாச்சியை சேர்ந்த 40 வயது பெண் ஆகியோருக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதன் காரணமாக கடந்த ஒரு வாரத்தில் பச்சிளம் குழந்தை உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இதன் காரணமாக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் செயல்பட்டு வந்த பிரசவ வார்டு நேற்று முதல் மூடப்பட்டது. அங்கு அனுமதிக்கப்பட்டு இருந்த கர்ப்பிணிகள் முதல்-அமைச்சரின் காப்பீட்டு திட்ட வார்டுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து பிரசவ வார்டில் கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com