

புதுடெல்லி:
மாருதி சுசுகி சியாஸ் எஸ் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதிகப்படியான காஸ்மெடிக் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள சியாஸ் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. புதிய சியாஸ் எஸ் விலை இந்தியாவில் ரூ.9.39 லட்சத்தில் இருந்து துவங்குகிறது.
புதிய மாடலை அறிமுகம் செய்து விழாவில் பேசிய மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் விளம்பரம் மற்றும் விற்பனை பிரிவு மூத்த தலைவர் ஆர்.எஸ். கல்சி, 'இந்தியாவில் அக்டோபர் 2014-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட சியாஸ் மாடல் இதுவரை 1.70 லட்சம் யுனிட்களை விற்பனை செய்யப்பட்டுள்ளது. மாருதி சுசுகியின் பிரபல மாடலாக அறியப்படும் சியாஸ் புதிய மாடல் ஆட்டோமொபைல் சந்தையில் மேலும் நல்ல வரவேற்பை பெறும்.' என தெரிவித்துள்ளார்.
2015-ம் ஆண்டு மாருதி சுசுகி சியாஸ் ஆர்.எஸ். என்ற மாடலை அறிமுகம் செய்தது. இது ஏற்கனவே வெளியிடப்பட்ட சியாஸ் மாடலின் மேம்படுத்தப்பட்ட பதிப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும், இந்த மாடலில் அதிகப்படியான மாற்றங்கள் இடம்பெறவில்லை. அந்தவகையில், சுசுகி சியாஸ் எஸ் மாடலில் பெரிய ஸ்பாய்லர், பிரம்மாண்ட பம்ப்பர் மற்றும் ஸ்கல்ப்ட்டெட் லைன், முன்பக்கம் மற்றும் பக்கவாட்டுகளில் அன்டர் ஸ்பாய்லர்கள் வழங்கப்பட்டுள்ளது.
புதிய சியாஸ் முந்தைய மாடல்களை போன்ற நிறங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய சுசுகி சியாஸ் எஸ் மாடலில் ஆல்ஃபா ட்ரிம் சார்ந்த உயர்-ரக அம்சங்கள் நிறைந்துள்ளது. இதனால் காரில் டச் ஸ்கிரீன் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ரய்டு ஆட்டோ போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் கிளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் மற்றும் அழகிய கருப்பு நிற இன்டீரியர், லெதர் சீட் மற்றும் டூயல் ஏர்-பேக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஃபோர்ஸ் லிமிட்டர், EBD சார்ந்த ABS மற்றும் ISOFIX வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.
முந்தைய சியாஸ் மாடல்களை போன்றே புதிய மாடலிலும் 91 bhp 1.4 லிட்டர் பெட்ரோல் மற்றும் bhp 1.3 லிட்டர் டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் சுசுகி ஸ்மார்ட் ஹைப்ரிட் (SHVS) சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் பதிப்பு 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 4-ஸ்பீடு ஆட்டோபாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. எனினும் டீசல் பதிப்பில் 5-ஸ்பீடு மேனுவல் யுனிட் வழங்கப்பட்டுள்ளது.