மகாத்மா காந்தி படித்த 164 ஆண்டுகள் பழமையான ஆரம்ப பள்ளி இழுத்து மூடப்பட்டது

குஜராத் மாநிலத்தில் மகாத்மா காந்தி படித்த பள்ளியை அருங்காட்சியமாக்கும் அரசின் நகர்வுக்கு ஏற்றவாறு அப்பள்ளி மூடப்பட்டது.
மகாத்மா காந்தி படித்த 164 ஆண்டுகள் பழமையான ஆரம்ப பள்ளி இழுத்து மூடப்பட்டது
Published on

ராஜ்கோட்டில் மோகன்தாஸ் காந்தி உயர்நிலைப் பள்ளி என அறியப்பட்ட பள்ளியை அருங்காட்சியமாக்கும் நகர்வை கடந்த வருடம் குஜராத் மாநில அரசு ஏற்றுக் கொண்டது. மகாத்மா காந்தி கடந்த 1887-ம் ஆண்டு தன்னுடைய 18 வயதில் இப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். அருங்காட்சியகம் ஆக்கும் முடிவை நோக்கிய பயணத்தில் பள்ளி நிர்வாக அதிகாரிகள் மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்க தொடங்கியது. மாவட்ட கல்வித்துறை அதிகாரி ரிவா பட்டேல் பேசுகையில்,

“பள்ளியை விட்டு வெளியில் செல்வதற்கான சான்றிதழ்களை மாணவர்களுக்கு நாங்கள் வழங்க தொடங்கிவிட்டோம், அடுத்த கல்வி ஆண்டில் மாணவர்கள் பிற பள்ளிகளில் சேர்ந்துக் கொள்ளும் விதமாக  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது,” என கூறிஉள்ளார்.

பள்ளியை மூடிவிட்டு அதனை அருங்காட்சியகம் ஆகும் திட்டத்தை கடந்த வருடம் ராஜ்கோட் மாநகராட்சி குஜராத் மாநில அரசுக்கு அனுப்பி வைத்தது. மாநகராட்சியின் இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட குஜராத் மாநில அரசு, அம்மாநில கல்வித்துறையை இதற்கான நடவடிக்கையை தொடங்குமாறும், பள்ளி கட்டிடத்தை மாநகராட்சியிடம் வழங்குமாறும் கேட்டுக் கொண்டு உள்ளது. ராஜ்கோட் மாநகராட்சி கமிஷனர் பி என் பானி பேசுகையில்,


“ரூ. 10 கோடி செலவில் பள்ளி கட்டிடத்தை அருங்காட்சியகம் ஆக்கும் பணிக்கு ஒரு ஆலோசகரை நியமனம் செய்து உள்ளோம். இந்த அருங்காட்சியமானது காந்திஜி, சர்தார் வல்லபாய் பட்டேல் மற்றும் பிற முக்கிய நபர்களின் வாழ்க்கை வரலாற்றை தாங்கி நிற்கும்,” என்றார்.

மகாத்மா காந்தி இப்பள்ளியில் கடந்த 1880 முதல் 1887 வரையில் படித்தார்.

தொடக்கத்தில் ராஜ்கோட் உயர்நிலைப் பள்ளி என அறியப்பட்ட இந்த பள்ளியானது பிரிட்டிஷ் ஆட்சியின் போது 1853-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொடங்கப்பட்டது. அப்போதைய நாட்களில் இந்த பள்ளிமட்டும்தான் சவுராஷ்டிரா பகுதியில் இருந்த ஒரே ஆங்கில வழி கல்வியை பயிற்றுவிக்கும் பள்ளியாகும். இப்போது இருக்கும் ஆல்ஃப்ரெட் உயர்நிலைப் பள்ளியின் கட்டிடமானது 1875-ம் ஆண்டு ஜுனகத்தின் நவாப்பால் கட்டப்பட்டது. 1947-ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்திய சுதந்திரத்திற்கு பின்னதாக பள்ளியானது மோகன்தாஸ் காந்தி உயர்நிலைப் பள்ளியாக பெயர் மாற்றப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com