

மும்பை:
மகாராஷ்டிரா மாநிலம் மராத்வாடா மாவட்டத்தில் பருவநிலை மாறுபாடு, வேளாண் உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிப்பு, போதிய விளைச்சல் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருகிறது.
மராத்வாடா பகுதியை சுற்றியுள்ள 8 மாவட்டங்களில் மட்டும் கடந்த ஜனவரி முதல் சுமார் 500 விவசாயிகள் விவசாயிகள் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டனர்.
மாநிலம் முழுவதும் ஆயிரத்துக்கும் அதிகமான கடன் சுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதுபோன்ற தற்கொலைகளை தடுக்கவும் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யவும் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இங்குள்ள விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் நீண்ட நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர்.
இதன் விளைவாக, விவசாயிகளின் பயிர் கடன் தொகையில் 34 ஆயிரம் கோடி ரூபாய்க்கான கடன் தள்ளுபடி செய்யப்படும் என மகாராஷ்டிரா முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கடந்த ஜூன் மாதம் அறிவித்தார்.
இந்த அறிவிப்பின் மூலம் 89 லட்சம் விவசாயிகள் பலன் அடைவார்கள். 40 லட்சம் சிறிய விவசாயிகளின் கடன் சுமை நீங்கும். இந்த திட்டத்தின்கீழ் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை பயிர் கடன்கள் தள்ளுபடியாகும் தேவேந்திர பட்னாவிஸ் குறிப்பிட்டிருந்தார்.
இந்த சலுகையை பெற விரும்பும் விவசாயிகள் நேரிலும் ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்க 14-9-2017 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், 50,68,711 விவசாயிகள் நேரிலும், 98,09,248 ஆன்லைன் மூலமாகவும் மனு செய்திருந்தனர். மனு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என விவசாய சங்கத்தினர் விடுத்திருந்த கோரிக்கையை ஏற்று இறுதி தேதியை மேலும் ஒருவார காலம் நீட்டிப்பு செய்து முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இன்று உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, இந்த கடன் தள்ளுபடிக்கான மனு வரும் 22-ம் தேதி பெறப்படும் என மகாராஷ்டிரா அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.