முதல் பரிசு வழங்குவதில் பாரபட்சம்: கலெக்டர் விளக்கம் தெரிவிக்குமாறு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசு வழங்குவதில் பாரபட்சம் காட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் கலெக்டர் விளக்கம் அளிக்குமாறு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதல் பரிசு வழங்குவதில் பாரபட்சம்: கலெக்டர் விளக்கம் தெரிவிக்குமாறு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
Published on

மதுரை:

புதுக்கோட்டை மாவட்டம், பிடாரம்பட்டியைச் சேர்ந்த மலையாண்டி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எனது ஜல்லிக்கட்டு காளை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்பது வழக்கம். இந்த ஆண்டு கடந்த மாதம் 16-ந் தேதி நடந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் எனது காளை பங்கேற்றது.

அதில் சிறந்த காளையாக எனது காளை தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. அந்த சமயத்தில் கலெக்டர் முன்னிலையில்தான் எனக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

கலெக்டர் புறப்பட்டுச் சென்ற பின்னர் சிறந்த காளையாக எனது காளைக்கு வழங்க வேண்டிய முதல் பரிசை, மற்றொரு காளைக்கு வழங்கினார்கள். அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே எனக்கு வழங்க வேண்டிய பரிசை மற்றொருவருக்கு கொடுத்துள்ளனர்.

எனவே சிறந்த காளையாக எனது காளைக்கு முதல் பரிசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பினேன். இதுவரை எந்த பதிலும் இல்லை.

எனது புகார் மனு தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் மனுதாரர் கொடுத்த புகார் குறித்து கலெக்டரிடம் விளக்கம் கேட்டு தெரிவிக்க வேண்டும் என்று அரசு வக்கீலுக்கு நீதிபதி உத்தரவிட்டார். #Tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com